அரசு ஒதுக்கிய நிலத்தை எடியூரப்பாவின் மகன், மகள் திரும்ப ஒப்படைத்தனர்

20/11/2010 19:00

 

அரசு ஒதுக்கிய நிலத்தை முதல்வர் எடியூரப்பாவின் மகன் மற்றும் மகள் ஆகியோர் அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா. இவர் ஷிமோகா தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார். இவருக்கு பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) ஆர்எம்வி எக்ஸ்டன்சனில் 50-க்கு 80 வீட்டுமனை ஒதுக்கியிருந்தது. அந்த நிலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி பிடிஏவுக்கு ராகவேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.

 

முதல்வரின் மகள் உமாதேவிக்கு கர்நாடக தொழில் வளர்ச்சிக் கழகம் (கேஐஏடிபி) ஹாரோஹள்ளியில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது.

தொழிற்சாலை துவங்க நிலம் ஒதுக்கும்படி கேஐஏடிபியிடம் உமாதேவி மனு அளித்திருந்தார். அதன்படி அங்கு 2 ஏக்கர் நிலத்தை உமாதேவிக்கு கேஐஏடிபி ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தில் இன்னும் தொழில் துவங்கப்படவில்லை. இதனால், இந்த நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்ளும்படி கேஐஏடிபிக்கு உமாதேவி கடிதம் எழுதியுள்ளார்.

 

ராகவேந்திராவுக்கு பெங்களூரில் ஏற்கெனவே ராச்சேனஹள்ளியில் வீட்டுமனை உள்ளது. ஒருவருக்கு ஏற்கெனவே பெங்களூரில் வீட்டுமனை இருந்தால் அவர் மீண்டும் வீட்டுமனை கேட்டு மனு அளிக்கக் கூடாது. வீட்டுமனை இருப்பதை மறைத்து வீட்டுமனை கேட்டு பிடிஏக்கு மனு அளிக்கக் கூடாது. ஆனால், தனக்கு வீட்டுமனை இருப்பதை மறைத்து.

 

ராகவேந்திரா மனு அளித்து வீட்டுமனை பெற்றுள்ளார். இது பிரச்னையாகிவிட்டதால் இப்போது ஆர்எம்வி எக்ஸ்டன்சனில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை ராகவேந்திரா திரும்ப ஒப்படைத்துவிட்டார்.  அதுபோல் உமாதேவியும் ஒப்படைத்துவிட்டார்.

 

வீட்டுமனைக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் பிடிஏ, பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் ஆகியவை கையப்படுத்திய நிலத்தை விலக்கு அளித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு விலக்கு அளித்து உத்தரவிட்ட நிலத்தை தனது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து, இது பற்றி விசாரணை நடத்த விசாரணைக் கமிஷன் அமைக்க வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது நிலங்களை முதல்வரின் மகனும் மகள்களும் திரும்ப ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dinamani.com