அரசு மற்றும் முக்கிய தலைவர்களுக்கு மிரட்டல் கடிதம் சம்மந்தமாக தஞ்சையில் 3 பேர் கைது

20/11/2010 18:41

ஜெ., உள்ளிட்டோருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக தஞ்சாவூரைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன். இவரது சகோதரிகள் கிரிஜா மற்றும் லதா ஆகியோர் திருமணமாகி விவாகரத்தானவர்கள். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு மறுமணம் செய்ய மோகன் முயற்சி செய்து வந்தார்.

 

இம்முயற்சிக்கு பாஸ்கர் என்பவர் தடையாக இருந்தார். பாஸ்கர் முயற்சியின் காரணமாக நாகராஜனும், கனகராஜூம் மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோகன், கிரிஜா மற்றும் லதா ஆகிய மூவரும், பாஸ்கர், நாகராஜன் மற்றும் கனகராஜ் ஆகியோர் பெயரில், கடந்த 6 மாதங்களாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தலைமைச்செயலகம், கோவை செம்மொழி மாநாடு, ஜெயா டி.வி., உள்ளிட்ட இடங்களுக்கு போலி மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். போலீசார் விசாரணையில் இம்மூவரும் மிரட்டல் கடிதங்களை அனுப்பியது தெரியவந்ததையடுத்து மூவரையும் அய்யம்பேட்டை போலீசார் கைது செய்தனர். கிரிஜா மாத்தூர் பகுதியில் அரசு ஆசிரியையாகவும், லதா சூலமங்கலம் பகுதி வி.ஏ.ஓ.,வாகவும் பணியாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
dinamalar.com