அரபியப்பாவும் மௌலீதும் - மக்கள் சிந்திப்பார்களா?

19/01/2011 11:32

ஒவ்வொரு வருடமும் ஸபர் மாதத்தில் நமதூரில் அடங்கியுள்ளதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அரபி அப்பா (அரபு நாட்டுப் பெரியவர்) என்ற பெயர் தெரியாத நபரின் அடக்கஸ்தலத்தில் மௌலீது ஓதி சீரணி வழங்கி வருகின்றனர். மக்களும் ஆர்வத்தேடு தேங்காய் சேறு ஆக்கியும், சீரணி என்ற பெயரில் பல்வேறு பதார்தத்தையும் காணிக்கை என்ற பெயரில் பண முடிப்புகளையும் கொடுத்து வருகின்றனர்.

 

இந்த நிகழ்வுகளெல்லாம் இஸ்லாமிய போர்வையில் நடைபெறுகின்றன. இஸ்லாத்தில் இது போன்று மரணித்தவர்களுக்கென ஒரு மண்டபம் அமைத்து அவர்களுக்காக அரபி மொழியில் சில பாடல்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் பாடி அதன்பின் பிரசாதங்கள் அதாவது சீரணி வழங்கப்படுவதும், அதற்க்கும் மேல் சில ஊர்களில் கொடியேற்றி, தேர் (கூடு) இழுத்து விழா நடத்தப்படுவதும் நாம் அறிந்ததே.

 

இது போன்ற விழாக்கள் எல்லாம் ஊர்களின் கொளரவத்தை காட்டவும், ஒரு சிலரின் வருமானத்தை மனதில் வைத்தும், ஒரு சில அறியாத மக்களில் நம்பிக்கையினாலும் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் மக்களுக்கு இஸ்லாம் பற்றியோ அதன் தெளிவான வழிகாட்டுதல் பற்றியோ போதிய அறிவில்லாத காரணத்தால் நம் முன்னோர்கள் இது போன்ற சடங்குகளை செய்து வந்தனர். இது போன்ற சடங்குகளில் மாற்று மதத்தினரின் கலாச்சாரம் மலிந்து கிடப்பதையும் அதற்கு வேறு பெயர் வைத்து பின்பற்றுவதையும் காண முடியும்.

 

ஆனால் இன்றோ, இஸ்லாத்தை அறிந்து கொள்ள எத்தனையோ வசதிகள் வந்து விட்டது. 7 வருடம் மதரஸாவில் படித்தவர்களுக்கு மட்டும்தான் இஸ்லாத்தை தெறிந்து கொள்ளமுடியும் என்ற நிலை மாறி இன்று ஒவ்வொறு முஸ்லிமும் இஸ்லாத்தை கற்றுக்கொண்டாக வேண்டும் என்ற நிலையை உறுவாக்கியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.....

 

நம் முன்னோர்களான இமாம்களின் அளப்பறிய சேவைகளின் காரணமாக இஸ்லாம் இன்று தூய்மையான வடிவில் முஸ்லிம்களின் கைகளில் கிடைத்திருக்கிறது. அல்லாஹ் அவர்களுக்கு அருள்புறிவானாக! இஸ்லாத்தின் பெயரில் யார் எதை சொன்னாலும் நம்பிக்கொண்டிருந்த நம் முன்னோர்களின் அறியாமையை உடைத்து, இன்று யார் எது சொன்னாலும் அதற்கான ஆதாரத்தை கேட்கும் நிலை உறுவாகிவிட்டது. ஏனென்றால் நம் இமாம்களின் அந்த அளப்பறிய செயலால் இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் அதன் தூய்மையான தன்மையுடன் பாதுகாக்க இஸ்லாமிய சமுதாயம் சுமார் 5 இலட்சம்பேருடைய தனி மனித வரலாறுகளை பதிவுசெய்து பாதுகாத்து வைத்துள்ளது. இந்த செயலால் இஸ்லாம் என்று யார் எதை சொன்னாலும் அது இஸ்லாத்தில் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய செயல்தானா? என்று குர்ஆன் மற்றும் ஹதீஸை ஆய்வு செய்து அதை தவறான செயலா? அல்லது சரியான செயலா? என்று யாராலும் கூறிவிட முடியும்.

 

ஆனால் நாமோ அல்லாஹ்வுடைய மார்க்க விவகாரங்களில் அவனது எந்த வரைமுறைகளை“யும் பின்பற்றாமல், பிற்போக்கு சிந்தனையுடன் முன்னோர்களின் செயல்களாக உள்ள சில இஸ்லாத்திற்கு எதிறான செயல்களை செய்துவருகிறோம். இந்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும் என்றோ, நன்மையான காரியம் என்றோ எந்த உத்திரவாதமும் இல்லாமல், போட்டி மனப்பான்மையில் செய்துவருவது வருத்தத்திற்கு உறியது.

 

இன்னும் நம்மக்களில் பெரும்பாலானோர் இச்செயல்களை தவறு என்று உணர்ந்து வைத்துள்ளார்கள் அவர்களெல்லாம் நாம் அதில் இருந்து விலகிக்கொண்டால் போதும் என நினைக்கிறார்களே தவிர, நம் சமுதாயம் இப்படி மறுமைப்பலனை இழக்கும் செயலில் ஈடுபடுவதை நினைத்து அதை மாற்ற அல்லது அச்செயல்களை எதிர்க்க துணிவில்லாத காரணத்தால் அல்லாஹ்வால் மன்னிக்கவே படாத இணைவைப்புக் காரியங்களில் நம் மக்கள் சாதாரனமாக ஈடுபட்டு வருகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அவர்களின் சுயநலன் காரணமாக சத்தியத்தை மறைத்த குற்றத்திற்கு அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும்.

 

இன்னும் நமதூருக்கு தப்லீக் ஜமாஅத் வருவதும் இரண்டு நாட்கள் அல்லது 3 நாட்கள் தங்கி மக்களிடம் தொழுகை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம் அறிந்ததே. அவர்கள் யாரையாவது தர்ஹாக்களிலோ அல்லது மௌலீது மற்றும் ராத்திப் சபைகளில் அமர பார்த்திருப்பீர்களா? அவர்களின் கொள்கைப்படியும் இவை எல்லாம் இஸ்லத்திற்கு எதிரானவை. இன்னும் சில இயக்கங்கள் நமதூரில் செயல் பட்டுவருகிறது அவர்களின் கருத்துப்படியும் இவையெல்லாம் தவறான செயல்கள். ஆனால் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதற்க்காக மக்களுக்கு சொல்ல மறுக்கின்றனர்.

 

மேலும் இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூற்றுப்படியும் இவையெல்லாம் இஸ்லாத்தில் இல்லாத காரியங்கள். 4 மதஹபுகளை பின்பற்றுகிறோம், நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் என மார்தட்டிக் கொள்ளும் அவர்களின் கொள்கைப்படியாவது இவையெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவைதானா? இல்லை என மதஹபுகள் சொல்கிறது. அதற்க்கும் ஒரு படி மேலே சென்று ஷாஃபி மற்றும் ஹனபி இமாம்கள் இச்செயல்களை வண்மையாக கண்டித்துள்ளனர். இந்த கொள்கையுடையவர்கள் தர்ஹா, மௌலீது மற்றும் ராத்திபுகளை ஷாஃபியோ அல்லது ஹனபியோ ஓதச் சொன்னதாக ஆதாரத்தை எடுத்துவைக்க முடியுமா? ஒருக்காளும் முடியாது.

 

இப்படி அனைத்து தரப்பினராலும் தவறு என கண்டிக்கப்பட்டு நிரந்தர நரகத்தை பெற்றுத்தரும் காரியமான இணைவைப்புக் காரியத்தை நம் மக்கள் விட்டு, நன்மையான காரியத்தின்பாலும், அல்லாஹ்வுக்கு விருப்பமான காரியத்தின்பாலும் ஈடுபட்டு ஈருலக வெற்றியை பெற வல்லரஹ்மான் துணைபுறிவானாக!