இந்தியாவின் 20வது அணு உலையாக கைகா இயங்கத் தொடங்கியது

28/11/2010 15:19

 

கைகா (கர்நாடகா): இந்தியாவின் 20வது அணு உலையாக, கர்நாடக மாநிலத்தின் கைகாவில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை இயங்கத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் அணு மின்சார சக்தி 4780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது கைகா அணு உலை. இதன் 4வது யூனிட் 220 மெகாவாட் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நேற்றுகாலை முதல் இயங்கத் தொடங்கியது.

இதன் மூலம் இந்திய அணு உலைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. செயல்பாட்டில் உள்ள 20 அல்லது அதற்கு மேற்பட்ட அணு உலைகளைக் கொண்டுள்ள 6வது நாடாகவும் இதன் மூலம் இந்தியா உருவெடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பே கைகா 4 அணுஉலை தயாராகி விட்டபோதிலும், எரிபொருள் இல்லாததால் அதை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள், இந்தியாவுக்கு விதி விலக்கு அளிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து தற்போது தேவையான எரிபொருள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து கைகாவுக்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.

oneindia.in