இஸ்லத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட டோனிபிளேரின் மைத்துனி லாரன் பூத்
லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார்.
பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.
43 வயதாகும் பூத், இதுகுறித்து இங்கிலாந்து மீடியாக்களிடம் கூறுகையில், ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னரே நான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நான் தினசரி ஐந்து வேளை தொழுகிறேன். சில சமயம் மசூதிக்கும் போகிறேன். கடந்த 45 நாட்களாக நான் ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றார்.
தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.
தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.
பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார்.
Thats Tamil