இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது பயங்கர தாக்குதல் -ஒருவர் பலி

12/09/2012 12:46

 

பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல அமெரிக்கர்கள் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளன.

இந்த நாடுகளில் ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக், கடாபியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய சமூக வலைத்தளங்கள் மூலம் தான் புரட்சியை தூண்டிவிட்டது அமெரிக்கா. இந் நிலையில் இந்த வலைத்தளங்களில் இருந்தே அமெரிக்க திரைப்படத்துக்கும், தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கும் பொறி கிளம்பியுள்ளது.

நேற்று காலையில் இருந்தே எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். பலர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.

தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு அமெரிக்க அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பலருக்கு கை, கால்கள் உடைந்தன. அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும் சூறையாடி, தீ வைத்தனர்.

இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது. செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

எகிப்திலும்...

அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.