ஈராக்கில் பயங்கரம்: 24 இடங்களில் குண்டு வெடித்தது; 200 பேர் பலி

04/11/2010 15:26

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கி லிடப்பட்ட பிறகு அங்கு அவரது ஆதரவார்களும், தீவிரவாதிகளும் தொடர்ந்து குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
 
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் தீவிரவாதிகள புகுந்து அங்கு பிரார்த்தனையில் பங்கேற்ற சுமார் 120 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.
 
அவர்களை மீட்க அமெரிக்கா மற்றும் ஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் பலியானார்கள். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
 
அச்சம்பவம் நடந்து முடிந்த 2 நாளில் நேற்று தீவிரவாதிகள் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தில் “ஷியா” பிரிவினர் வசிக்கும் பகுதியில் 24 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகளை வெடிக்க செய்தனர்.
 
பாக்தாத் நகரை சுற்றியுள்ள அபுட்சீர், அபு கரைப், அமில், அமீன், பயா, சுகூக், கீரத்,  ஜிஹாத், காதிமியா, கமாலியா, ரஹ் மானியா, சதார் உள்ளிட்ட 14 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. அதில், சுமார் 76 பேர் பலியானார்கள். 271 பேர் காயம் அடைந்தனர்.
 
இவை தவிர ரோடு ஓரங்களில் 2 இடங்களில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமும் வெடிக்க செய்தனர். மேலும் 8 இடங்களில் மோட்டார் குண்டுகளையும் வெடிக்கச் வைத்தனர்.
 
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 200 பேர் பலியாகி உள்ளனர். 320 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
 
இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் “ஷியாட்” பிரிவினர் நடத்தும் ஓட்டல்கள், காபி ஷாப்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் சேரி பகுதிகளில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.
 
இந்த சம்பவங்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு ஈராக்கின் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் மேஜர், ஜெனரல் மொகமது, அல்-அஸ்காரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மிரட்டல்களால் எங்களை தீவிரவாதிகள் பணிய வைக்க முடியாது. அவர்கள் மீதான எங்கள் தாக்குதல் தொடரும். நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.