ஈரானின் அணுவாயுதம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை – அகமதி நிஜாத்

14/11/2010 15:36

 ஈரானின் அணுவாயுத உற்பத்தி தொடர்பான பேச்சுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அந்த நாட்டின் அரசு அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாறாக உலக அமைதி பற்றி ஈரானுடன் யாராவது பேச முற்பட்டால் அதற்கு தமது நாடு தயாராக இருப்பதாகவும் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் அவர் கூறியிருக்கின்றார்.

ஈரானின் அணுவாயுத உற்பத்தி தொடர்பாக கரிசனையும், கண்டனமும் வெளியிட்டுள்ள உலக வல்லரசு நாடுகள், ஈரான் தனது அணுவாயுத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, சீனா, மற்றும் யேர்மனி போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாத இறுதியில் ஈரானுடன் பேச்சு நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் ஈரானிய அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

இது பற்றிக் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியம், அணுவாயுதம் பற்றிய பேச்சுக்களுக்கான கதவை ஈரான் முழுமையாக மூடவில்லை என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் நாள் முதல் டிசம்பர் 5ஆம் நாள்வரை ஈரானின் அணுவாயுதம் தொடர்பான பேச்சுக்களை துருக்கியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

pathivu.com