ஈரானின் முதல் அணு மின் நிலையம் ஜனவரி மாதம் செயல்படும்

30/11/2010 14:59

ஈரான் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் நெருக்கடி அளித்து வருகின்றன. அணுகுண்டு தயாரிப்புக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டின. இந்த நிலையில், ஈரான் நாட்டின் முதல் அணு மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன.

அணு மின்சக்தி உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் ரியாக்டருக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் பணிகள் ஏறத்தாழ முடிந்து விட்டதாக அணு தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். ரஷியா உதவியோடு அமைக்கப்பட்ட இந்த அணு மின் நிலையத்தின் பணிகள், நீண்ட காலமாக தாமதமாகி வந்தது.

தற்போது, அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதால் ஜனவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று ஈரான் அணுசக்தி தலைவர் அலி அக்பர் சலாகி தெரிவித்தார். புஷெர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த அணு மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். dailythanthi.com