ஈரானில் அணுவியல் அறிவியலாளர் ஒருவர் படுகொலை

29/11/2010 14:53

 

ஈரானின் தலைநகர் தெகரானில் அணுவியல் பேராசிரியர் ஒருவர் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாகவும், வேறொருவர் இதே போன்றதொரு தாக்குதலில் காயமடைந்ததாகவும் ஈரானிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


இப்பேராசிரியர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளே வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெகரானின் சாகிது பெகெச்ட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஜீத் ஷஹிரியாரி என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். இவர் இப்பல்கலைக்கழகத்தின் அணுசக்திப் பொறியியல் பிரிவின் உறுப்பினராவார். இவரது மனைவியும் தாக்குதலில் படுகாயமடைந்தார்.


இன்று திங்கட்கிழமை காலையில் தமது வீடுகளில் இருந்து பலகலைக்கழகத்திற்குப் புறப்பட்டு சென்ற வேளையிலேயே இக்குண்டுகள் வெடித்துள்ளன.


"பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற இரண்டு பேராசிரியர்கள் தமது பணிக்குச் சென்று கொண்டிருக்கையில் சியோனிசியத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர்,” என ஈரானியத் தொலைக்காட்சி அறிவித்தது.


இரண்டாவது தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் அப்பாசி என்பவர் "ஓரகத் தனிமங்களைப் பிரிக்கக்கூடிய ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்,” என இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.


இவ்வாண்டு ஆரம்பத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் ஈரானிய அறிவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ta.wikinews.org