உயர் நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவாரா?

11/11/2010 20:51

வருமானத்திற்கு அதிகமாக சொத்து ‌சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்ய குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரியால் நியமிக்கப்பட்ட நீதிமன்றக் குழு, பெருமளவிலான நிதி மோசடி நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளதைத் தொடர்ந்து நீதிபதி செளமித்ரா சென்னை பதவியில் இருந்து நீக்குவது உறுதியாகியுள்ளது.

இந்த விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தன்னுடைய அறிக்கையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 217 (1) மற்றும் ஆர்டிகிள் 124 (4)ன் படி, நீதிபதி சென் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளதாகக் கூறியுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் நீதிபதி சென் ரிசீவராக நியமிக்கப்பட்டிருந்தபோது, தவறான முறையில் ஏராளமான பணத்தைப் பெற்றுள்ளார். இது எங்களது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி