உலகம் முழுதும் அதிகரித்து வரும் முஸ்லீம்களின் எண்ணிக்கை
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானார்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில்,அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவிகிதம் அதிகரித்தால் 2010 ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030 ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.
உலகம் முழுவதும் அதிகரித்துவரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால்,2030 வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர்,அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர்.
கடந்த கால சமூகப்பொருளாதார போக்கின் அடிப்படையிலும்,தற்போது அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அந்த ஆய்வறிக்கை, இதே போக்கு நீடித்தால் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72 லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.
மேலும் இன்றைய நிலையே நீடித்தால், உலகின் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் (சுமார் 60 விழுக்காடு) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில்தான் வசிப்பார்கள் என்றும், 20 விழுக்காட்டினர் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.
அதே சமயம் இஸ்லாமிய மக்கள் தொகையில் இந்தோனேஷியாவை, பாகிஸ்தான் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றாலும், 2030 வாக்கில் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில்,இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1990 லிருந்து 2010 வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் வெப்துனியா 28-1-2011