எடியூரப்பா ஒதுக்கிய வீட்டுமனையை திரும்ப ஒப்படைத்தார் அமைச்சர் மும்தாஜ்

21/11/2010 14:49

முதல்வர் எடியூரப்பா ஒதுக்கிய பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் வீட்டுமனையை திரும்ப ஒப்படைத்துள்ளார், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மும்தாஜ் அலிகான்.
 

 தென் மாநிலங்களில் முதல்முறையாக அமைந்த பாஜக அமைச்சரவையில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் மும்தாஜ் அலிகான். 2008- ஆண்டு பெல்காமில் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்தபோது, பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் (பிடிஏ) வீட்டுமனையை ஜி-பிரிவு ஒதுக்கீட்டின்கீழ் பெற்றுக் கொள்ள விண்ணப்பம் அனுப்புமாறு மும்தாஜ் அலிகானை முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டாராம். 

அதன்படி, கான் அனுப்பிய விண்ணப்பத்தின்பேரில் 2009 மே மாதத்தில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் எச்.ஆர்.பி.ஆர். லேஅவுட்டில் வீட்டுமனை ஒதுக்குமாறு அப்போதைய பிடிஏ ஆணையர் எச்.சித்தையாவை கான் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்பேரில், எச்.ஆர்.பி.ஆர். லேஅவுட்டில் 50-க்கு 80 அடி பரப்பளவு கொண்ட வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. ஆனால், அத்துடன் பெங்களூரில் தனக்கு வேறு வீட்டுமனை இல்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு பிடிஏ கடிதம் எழுதியிருந்தது. பெங்களூரில் கானுக்கு ஏற்கெனவே வீட்டுமனை இருந்ததால், பிடிஏ ஒதுக்கிய வீட்டுமனையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக 2009 ஜூன் 24-ம் தேதி பிடிஏவுக்கு கான் கடிதம் எழுதினார்.  பெங்களூரில் தனக்கு வீட்டுமனை இருப்பதால், பிடிஏ ஒதுக்கிய வீட்டுமனையை திரும்ப ஒப்படைக்கிறேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.   இது குறித்து மும்தாஜ் அலிகான் கூறியது: எனக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிடிஏவிடமிருந்து கடிதம் வந்தது. பெங்களூரில் எனக்கு வீட்டுமனை இல்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அதில் கேட்டிருந்தனர். பிடிஏ வீட்டுமனையை பெற இதுபோன்ற பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியாது.   கங்காநகரில் எனக்கு ஏற்கெனவே வீடு இருப்பதால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், 2010 ஜூலையில் முறைப்படி வீட்டுமனையை பிடிஏவிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டேன் என்றார்.


dinamani.com