என்னை நீக்கினால் 50 எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை விட்டு வெளியேறுவேன் :எடியூரப்பா

21/11/2010 14:55

 

6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் பா.ஜனதா கட்சிக்குள்ளும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பா.ஜனதா தலைவர்கள் சிலர் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் எடியூரப்பா புகார் செய்துள்ளார்.

இதற்கிடையே எடியூரப்பாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனால் எடியூரப்பாவுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது.
 

 

இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஒருவேளை எடியூரப்பா நீக்கப்பட்டால் அந்த நடவடிக்கை, நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்துமோ என கட்சி தலைமை அஞ்சுகிறது.


இந்த நெருக்கடியான கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியை சந்திக்க கூடாது, அதேவேளையில் முதல்-மந்திரியையும் மாற்ற வேண்டும். இதற்கு என்ன வழி என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்தனர்.


கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவரான எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால் அந்த இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் மேலிட தலைவர்கள் பரிசீலித்ததாக கூறப்படுகிறது.


இதன்படி முதல்-மந்திரியாக கர்நாடக பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பதவி வகித்து வரும் ஜெகதீஷ் ஷெட்டர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கனவே சபாநாயகராக பதவி வகித்தவர். சமீபத்தில் அவரது ஆதரவாளர்களால் முதல்-மந்திரி பதவிக்கு வற்புறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, முதல்-மந்திரி பதவியில் இருந்து தன்னை நீக்கக் கூடாது என கட்சி மேலிட தலைவர்களிடம் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் மீறி நீக்கினால் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 50 பேருடன் பா.ஜனதாவை விட்டு வெளியேறுவேன் என்று கட்சி மேலிட தலைவர்களை எடியூரப்பா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


இந்த சூழ்நிலையில் பா.ஜனதா மேலிடம் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கர்நாடக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

nakkheeran.in