காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிப்பது அவசியம்: மூவர் குழு வலியுறுத்தல்

15/11/2010 21:37

பூதாகரமாகியுள்ள காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் சில நடவடிக்கையை அரசு உடனடியாக எடுத்தாக வேண்டும் என்று காஷ்மீருக்கான மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள ராதா குமார் தெரிவித்தார்.

 

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக் கேட்பதற்காக இரண்டாவது தடவையாக மூவர் குழு அந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

 

இந்நிலையில் ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராதா குமார் கூறியது: இதுவரை காஷ்மீரில் பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடியதில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.

 

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முதலில் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான சில நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியமானது என்பது தெரியவந்துள்ளது.

 

முக்கியமாக இங்கு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல் மிக மிக அவசியம் என்பதை அறிய முடிந்தது.

 

இதுகுறித்து பெரும்பாலோர் பொதுவான கருத்தையே அளித்தனர். இந்த விஷயத்தில் தாமதிக்காமல் அரசு துரிதமாகச் செயல்படுவது அவசியம் என்தையும் பலர் வலியுறுத்தினர்.

 

மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழல் அடிப்படையில், மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இயலும்.

 

அப்படியில்லை என்றால் சிக்கலான இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணுவது வெறும் கனவாகவே இருக்கும் என்பதும் காஷ்மீர் மக்களின் கருத்தாகவுள்ளது.

 

இந்த விவகாரத்தில் எந்த விதத்திலும் பாகிஸ்தானை புறந்தள்ளிவிட்டு இந்திய அரசு தீர்வு காண முயற்சித்தால் பலன் கிடைக்காது. பாகிஸ்தானை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களும் திறந்த மனதுடன் அமர்ந்து பேச்சு நடத்துவது அவசியம். இதுவும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்று ராதா குமார் கூறினார்.

 

குற்றச்சாட்டுக்கு மறுப்பு: காஷ்மீரில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு கருத்துக் கேட்பதில் மட்டுமே மூவர் குழு ஆர்வம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, இந்தக் குற்றச்சாட்டு தவறானது.

 

மாநிலத்தில் நிலவும் சீதோஷ்ணநிலை அடிப்படையில்தான் நாங்கள் பயணத்தை மேற்கொள்கிறோம்.

 

குளிர்காலத்தில் லடாக், பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு எங்களால் செல்ல முடியாது. அங்கு கடும் குளிராக இருக்கும். இதனால்தான் இப்பகுதிகளுக்கு இப்போதோ சென்று கருத்தைக் கேட்டு வருகிறோம்.

 

எந்த எந்த பகுதிக்கெல்லாம் குளிர்காலத்தில் செல்ல முடியாதோ அங்கெல்லாம் முதலில் கருத்துக் கேட்கும் வகையில் பயணத் திட்டத்தை வகுத்துள்ளோம் என்றார்.

 

நம்பிக்கை: மூவர் குழுவை பிரிவினைவாதத் தலைவர்கள் சந்திக்க மறுத்துவருகிறார்களே என்று கேட்டதற்கு,இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

 

காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் நாங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எங்களது கருத்துக் கேட்பு பயணம் நிறைவடைவதற்குள் நிச்சயம் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

dinamani.com