குஜராத் கலவர வழக்கு - 21 பேருக்கு ஆயுள் தண்டனை!

01/08/2012 20:51

குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டுத் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  65 வயதுடைய பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

குஜராத் கவலரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற 9 வழக்குகளில் தீப்தா தர்வாஜா கூட்டுக் கொலையும் அடங்கும். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலணாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

பின்னர் இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 82 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சவா, 10 பேரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தார். பாஜக தலைவர்கள் இருவர் உள்ளிட்ட மேலும் 51 பேரை சந்தேகத்தின் பலன் என்ற அடிப்படையில் விடுவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் கொலை செய்ததாகவோ அல்லது முன்விரோதம் இருந்ததாகவோ அறிய முடியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள்  கொலை முயற்சி மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் விஸ்நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோசா பட்டேல் என்ற பிரஹலாத்பாய் மோகன்லால் பட்டேல், விஸ்நகர் நகராட்சியின் முன்னாள் தலைவர் தஹிபாய் பட்டேல் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சார்ந்தவர்கள். இக்கொலைச் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் எம்.கே. பட்டேல் தன்னுடைய பணியைச் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல்துறை முன்னாள் ஆய்வாளர் உள்பட அனைவருமே பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


www.inneram.com


Create a website for free Webnode