சங்கரராமன் கொலை வழக்கில் 62வது நபரும் பல்டி, பிறழ் சாட்சி-வழக்கு பிசுபிசுக்கிறது

30/11/2010 13:51

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் வழக்கு பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. நேற்று 62வது சாட்சி தான் முன்பு சொன்னதை மறுத்து வாக்குமூலம் அளித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிரது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் ஆஜர் ஆனார்கள்.

இந்து அறநிலையத்துறை மேலாளர் ரவிக்குமார், பால் பூத் விற்பனையாளர் சதீஷ்குமார், வங்கி மேலாளர்கள் மோகன்ராஜ், வைத்தியநாதன், ராம்குமார் ஆகியோரிடம் நேற்று சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சதீஷ்குமார் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்ததை மாற்றிக் கூறினார். இதைத் தொடர்ந்து அவரது சாட்சியம் பிறழ்சாட்சியாக பதிவு செய்யப்பட்டது. மற்றவர்கள் ஆவணங்களை தாக்கல் செய்தனர். சாட்சி விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 118 சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இதுவரை 62 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதால் வழக்கு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
oneindia.in