சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 3 சாட்சிகள் 'பல்டி'!

02/11/2010 12:49

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தக் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், ரவி சுப்பிரமணியம், அப்பு உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவரானார். பின்னர் நடந்த விசாரணையில் அவர் பல்டி அடித்து பிறழ் சாட்சியானார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது காஞ்சீபுரம் வட்ட திமுக செயலாளர் சங்கர், வங்கி அதிகாரிகள் கணேசன், குப்புசாமி, பத்மராகம், கோவில் வாசலில் செருப்புக்கடை வைத்திருக்கும் நாராயணசாமி, எழுத்தர் கோவிந்தராஜ், கோசாலை பணியாளர் கணபதி, காமாட்சி அம்மன்கோவில் நிர்வாகி செல்லப்பா, வரதராஜபெருமாள் கோவில் உதவியாளர் பாலகுமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இதில் கணபதி, பாலகுமார், நாராயணசாமி ஆகியோர் ஏற்கனவே அளித்த சாட்சியத்துக்கு மாறாக பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவர்கள் பிறழ் சாட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அதில் 58 சாட்சிகள் பல்டி அடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சாட்சிகளிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், சங்கராச்சாரியார் தரப்பு வழக்கறிஞர்கள் தினகரன், லட்சுமண ரெட்டியார் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ராமசாமி ஒத்தி வைத்தார்.

இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்பட 17 பேருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர்களது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர்.

oneindia.com