சாக்கடை நீர் பாதை, மனித கழிவு தொட்டி பராமரிக்க எந்திரங்கள்: அரசு உத்தரவு

28/11/2010 14:55

சாக்கடை நீர் பாதை மற்றும் மனித கழிவு தொட்டிகளைப் (செப்டிக் டாங்க்) பராமரிக்கும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை இனி தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாது என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மனிதர்களைக் கொண்டு சாக்கடையை சுத்தம் செய்கின்றனர். இதில் பல தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இனி சாக்கடை சுத்தம் செய்வதற்கு மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்களைப் பயன்படுத்துவோம் என்றும், இது குறித்து அதிகாரிகள் அடங்கிய குழு மூலம் முடிவு எடுப்போம் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அரசு தான் அளித்த உறுதிகளை மறந்ததால் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பணிகளில் ஈடிபடுத்தப்பட்ட 15 பேர் உயிர் இழந்துள்ளதாக அரசு மீது இன்னொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் சாக்கடை துப்புரவு பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கு 71 ஜெட் ராடிங' எந்திரங்கள், சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கு 73 டிசில்டிங் எந்திரங்களை வாங்கியிருக்கிறது.

தனியார் மற்றும் பொது இடங்களில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்காக தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

மனித கழிவுத் தொட்டி அல்லது சாக்கடை நீர் செல்லும் பாதை மற்றும் அதில் இறங்குவதற்கான மேன்ஹோல் ஆகிய இடங்களில் நச்சு வாயு இருக்கும் என்பதையும், அதில் இறங்கி மனிதர்கள் வேலை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களை பயன்படுத்தினால் அவர்களிடம் உரிய உத்தரவாதத்தை பெற வேண்டும். இந்த பணியி்ல் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைக் கடைபிடிப்போம், சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ள 4 சூழ்நிலைகளிலும், பாதுகாப்பு உபகரணங்களோடு தான் அவர்களை அனுமதிப்போம் என்று எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் பெற வேண்டும்.

அரசாணையையோ அல்லது நீதிமன்ற உத்தரவையையோ பின்பற்றாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதிகாரிகள் மீதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தவறு செய்பவர்களை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது.

எந்திரத்தை கொண்டு செல்ல முடியாத 4 சூழ்நிலைகளில் மட்டும் மனிதர்களை பாதுகாப்பு உபகரணங்களோடு பயன்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சாக்கடை நீர் செல்லும் பழைய மற்றும் புதிய பாதையை இணைக்கும் பணி, மேன்ஹோல் உடைந்து சாக்கடை செல்லும் பாதையில் விழுந்தால் அவற்றை எடுக்கும் பணி, மீண்டும் அவற்றை பொருத்தும் பணி, நீர் மூழ்கி பம்பு செட்டுகளை அகற்றும் பணி ஆகிய 4 பணிகளுக்கு மட்டும் உயர் நீதிமன்றம் விதிவிலக்கு அளித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

oneindia.in