சென்னை: காதல் மோசடி மன்னன் சைபுதீன் கைது

17/11/2010 21:21

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மும்தாஜ்பேகம் என்ற பெண்ணின் தந்தை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், இன்டர்நெட் மூலம் காதலித்து, தனது மகளை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை காட்டி, 15 சவரன் நகைகளை வாலிபர் ஒருவர் மோசடி செய்துவிட்டார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசாரை விசாரணை நடத்தும்படி கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மேரிராஜூ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
 

 


போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த வழக்கில் சென்னை, சின்னகொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த சைபுதீன் (27) என்ற வாலிபரை கைது செய்தனர். பிளஸ்-2 படித்துள்ள இவர், பி.சி.ஏ. பட்டதாரி போல நடித்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.


இன்டர்நெட் மூலம் பெண்களோடு பேசி அவர்களை காதலிப்பது போல நடித்து, பின்னர் திருமண ஆசை காட்டி பணம், நகைகளை சுருட்டி உள்ளார். இந்த மோசடி லீலைகளில் ஈடுபட்டது எப்படி என்பது பற்றி இவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்,


’’நான் பிளஸ்-2 படித்திருந்தாலும் நல்ல கம்ப்யூட்டர் அறிவு இருந்தது. கம்ப்யூட்டரில் `ஆர்குட்' இணையதளம் மூலம் ஏராளமான பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை வைத்து மோசடி விளையாட்டு நடத்த திட்டமிட்டேன்.

வங்கி ஒன்றில் பி.சி.ஏ. படித்ததாக போலி சான்றிதழ் மூலம் மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். 2 மாதம் மட்டும் அந்த வேலை நீடித்தது. அதன்பிறகு எனது வேஷம் கலைந்து வேலையை விட்டு துரத்தப்பட்டேன்.


இருந்தாலும் தொடர்ந்து அதே வேலையில் இருப்பதாக வெளியில் நாடகமாடி வந்தேன். இதே நாடகத்தை இணையதளத்தில் பெண்களிடம் பேசும்போதும் அரங்கேற்றினேன். எனது காதல் வலையில் மும்தாஜ் பேகத்தை விழ வைத்தேன். அவரும் நம்பினார். ஒருகட்டத்தில் திருமண ஆசைகாட்டி அவரிடமிருந்து செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி 15 சவரன் நகைகளை பறித்தேன். அதன்பிறகு அவரோடு உள்ள தொடர்பை துண்டித்துவிட்டேன்.


அவரிடம் பறித்த 15 சவரன் நகைகளை ரூ.11/4 லட்சத்துக்கு விற்றேன். அந்த பணத்தில் துபாய்க்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தேன். துபாயில் உள்ள கம்பெனி ஒன்றில் எனக்கு விற்பனை பிரதிநிதி வேலை கிடைத்திருந்தது. துபாய்க்கு செல்வதற்கு முன்பு போலீசார் என்னை பிடித்துவிட்டனர். எனக்கு 3 அண்ணன்களும், ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர்.


விளையாட்டாக ஆரம்பித்த இந்த மோசடி இப்போது என்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டது’’என்று தெரிவித்துள்ளான்.


மும்தாஜ் பேகத்தை போல, சைபுதீனிடம் மேலும் 4 பெண்கள் மோசம் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. சைபுதீனிடமிருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மும்தாஜ்பேகத்திடம் பறித்த நகைகளை கைப்பற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Nakkheeran.in