தாரிக் அஜீஸ் மரண தண்டனையை நிறைவேற்ற இராக் அதிபர் தயக்கம்

18/11/2010 14:58

தாரிக் அஜீஸ்இராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக் காலத்தில் துணைப் பிரதமராக இருந்த தாரிக் அஜீஸுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திடப் போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜலால் தலபானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஷியாக் கட்சிகளை துன்புறுத்தி அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறி இராக்கிய நீதிமன்றம் ஒன்று கடந்த மாதம் தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்தது.

இராக்கிய அதிபர் மரண தண்டனைக்கு எதிரான கொள்கையை உடையவர் என்று அறியப்பட்டவர் என்றாலும் கூட, இந்த உத்தரவில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளது தாரிக் அஜீஸின் மரண தண்டனையை நிறுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

 

ஜலால் தலபானி மரண தண்டனையை எதிர்ப்பவர்சதாம் உசைனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உத்தரவில் கூட இராக்கிய அதிபர் தலபானி கையெழுத்திட மறுத்த நிலையிலும், அவரது துணை அதிபர்கள் கையெழுத்திட்டதை அடுத்து சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார்.

தாரிக் அஜீஸ் 70 வயதான ஒரு முதியவர் என்றும், இராக்கிய கிறிஸ்தவர் என்கிற காரணத்தினாலும், தான் சோஷலிச ஜனநாயகத்தை பின்பற்றுபவர் என்பதாலும், அவரது மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திடவில்லை என்று ஜலால் தலபானி பிரெஞ்சு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.