திருச்சி: கிருஸ்தவ கல்லறையில் உள்ள தீண்டாமை சுவர் இடிப்பு: 10 பேர் கைது

30/10/2010 21:13

 

திருச்சி மேலபுதூரில் உள்ள உத்திரமாதா கோயில் கல்லறையில் உள்ள சுவரை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் நிலவன்,

திருச்சி மாநகரில் மைய பகுதியில் மேலபுதூரில் அமைந்துள்ளது உத்திரமாதா கோயில் கல்லறை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லறையில் ஆயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தில்லை மாநகர், தருமநாதபுரம், செங்குலம் காலணி, செந்தநீர்புரம், நாசிங்பேட்டை, வரகநெரி, ராஜாபேட்டை, மன்னார்புரம், ஜங்ஷன், காஜாமலை உள்ளிட்ட 32 பகுதிகளைச் சேர்ந்த கிருத்துவ மக்களுக்கு சொந்தமான இந்த கல்லறையில், தீண்டாமை சுவர் ஒன்றை எழுப்பி, நாங்கள் மேல் ஜாதி என்று அழைத்துக்கொள்ளும் வெள்ளாளர், ஆசாரி ஜாதியை சேர்ந்த கிருத்துவர்களை அடக்கம் செய்வதற்கு தனியாகவும், தாழ்த்தப்பட்ட கிருத்துவ மக்களை அடக்கம் செய்ய தனியாகவும், ஜாதிக் கண்ணோட்டத்தில் கல்லறையை இரண்டாக பிரித்து சுவர் எழுப்பியுள்ளனர்.

 













இந்த இரண்டு பிரிவினரும் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி) பிரிவை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பிரிவினரும் ஒரே கோயில் பங்கு உடையவர்கள். இந்து மதம் சாதியின் பெயரால், கொடுமை பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக கிருத்தவ மதத்தை தழுவிய லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை, அதே சாதி கொடுமையினால் வாட்டி வதைப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது, கிருத்துவ மதத்திற்கு அவமானத்தையும், துயரத்தையும் வழங்குவதோடு தங்களை பழைய சாதி அடையாளங்களை தக்க வைத்துக்கொள்வது மூலம் கிருத்துவ மதத்தை இந்துத்துவ படுத்தும் வேலையாக ஆதிக்க சாதிவெறி பிடித்த கிருத்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
 

இவர்கள் சாதிவெறிக்கு இந்த மேலபுதூரில் கல்லறையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவர், பெரிய எடுத்துக்காட்டாகும். 1960ல் மேலபுதூரில் உள்ள ஜாதி சுவரை இடித்து தள்ளுவேன் என பெரியார் கூறினார். ஆனால் கிருத்தவ வெள்ளாளர்களுக்கும், ஆசாரிகளுக்கும் சில தாழ்த்தப்பட்ட கிருத்தவர்கள் கை கூலியாக மாறியதால், பெரியாரின் முயற்சி தோல்வி அடைந்தது என்றார்.
 

பின்னர் நிலவன் தலைமையில், 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாறை, சம்மட்டி, சுத்தி ஆகியவற்றை கொண்டு சுவரை இடித்தது. அப்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் வந்த போலீசார், 10 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள், இறந்து பின்னும் சாதி எதற்கு? மரியே நியாயமா? என்ற கோஷங்களை எழுப்பினர்.

nakkheeran.in