தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்த கோரிக்கை

25/11/2010 10:12

 

மதுரை விமான நிலையத்தோடு சேர்த்து தூத்துக்குடி விமான நிலையத்தையும் நவீனப்படுத்தி, இங்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து லோக்சபாவில் நெல்லை எம்.பி.,யான ராமசுப்பு கூறியதாவது: தென் தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களான தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்டவற்றிற்கு பெரிதும் துணையாக உள்ளது தூத்துக்குடி விமான நிலையம். தற்போது நாள்தோறும் ஒரு விமானம் மட்டுமே வந்து செல்லும் நிலை இங்கு உள்ளது.


தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் பலரும் வேலை தேடி, தென்கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இப்பகுதி மக்கள் ஏராளமாக வேலை பார்த்து வருகின்றனர்.
 

இவர்கள் வந்து செல்ல விமான சேவை மிகவும் அவசியமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள 35 விமான நிலையங்களை மேம்படுத்த, அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தும் அதேவேளையில், தூத்துக்குடி விமான நிலையத்தையும் மேம்படுத்தி, நவீன வசதிகளுடன் கூடியதாக மாற்றி, விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு ராமசுப்பு கூறினார்.
dinamalar.com