தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும்

30/10/2010 20:14

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும் என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் காங்., தொண்டர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. காங்., நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதால் வரும் பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உதவியால், அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


நாகப்பட்டினம் துறைமுகம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், துறைமுகம் விரிவுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் சரக்கு போக்குவரத்து துவக்குதல் போன்றவை தமிழக அரசு செய்ய வேண்டும். அவர்கள் முயற்சி எடுத்தால், மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்யும். சேது சமுத்திரத்திட்டம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால், அது குறித்து கருத்து சொல்ல முடியாது.


இந்திய கப்பல் துறையில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், இந்திய அரசு இலங்கையுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்க, மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் வாசன் கூறினார்.


dinamalar.com