தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்

30/07/2011 16:40

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர்
வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர்
இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக
கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான்
இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும்
தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை
என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை
வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான்
முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும்
தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில்
காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது
தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை
ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க
கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர்
ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்
பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து
ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு
ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை
பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம்
அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில்
கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின்
ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது
போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது
நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப்
யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை
ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது
 
https://www.inneram.com/2011072818138/south-african-cricketer-parnell-accepts-islam-amla-link