நோன்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்...

21/07/2011 14:48

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185

 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்அனின் 2-183,185 ஆகிய வசனங்கள் நோன்பு நோற்பதற்க்கான மாதமாக ரமளான் மாதம் தேர்வு செய்யப் பட்டதையும் நோற்க வேண்டிய நோக்கத்தையும் தெளிவாக விளக்குகிறது.

 

இதில் அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தையை கவனிக்க வேண்டும் ” நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக” என்ற வர்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

 

இஸ்லாத்திற்க்கு முறனான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட உணவு, தண்ணீர் மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை இந்த ரமளானில் அல்லாஹ் ஒதுங்கியிருக்கும்படி கட்டளையிட்ட காரணத்தால் தனிமையில் யாரும் பார்க்காத நிலையிலும் நாம் அந்த இறைகட்டளையை மீறுவதில்லையே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

 

இந்தப் பயிற்ச்சி ரமளான் முடிந்த பின் அடுத்த ரமளான் வரும் வரை நம்முடைய இறையச்சத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும். அதற்காகத்தான் அல்லாஹ் ”நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக” என்ற வாசகத்தை பயன்படுத்துகிறான். உண்மையில் ஒருவர் அல்லாஹ்வை அஞ்சியவராக இந்த ரமளான் மாதத்தின் நோன்பை கடந்தவராக இருந்தால் அவருக்கு நிச்சயம் அல்லாஹ் இறையச்சத்தை வழங்குவான்.

 

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1903, 6057

 

ரமளான் மாதத்தில் பொய் மற்றும் பெய்யான நடவடிக்கைகளை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. உங்களிடம் இருக்கும் தீய பழக்கவழக்கங்களையும் இந்த ரமளானோடு விட்டொழிக்க வேண்டும் என இந்த ஹதீஸ் நமக்கு அறிவுறுத்துகிறது. காரணம் மற்ற நாட்களைவிட இறையச்சம் மிகைத்திருக்கு இந்த நாட்களிலேயே நாம் விடவில்லை என்றால் மற்ற நாட்களில் நம்மால் விடவே முடியாது.

 

பொதுவாக நம் மக்களிடம் புகை, மது, பொய், மாது, சூது, சினிமா மற்றும் மோசடி போன்ற நடவடிக்கைகள் இருக்கும் அதை அவர்களே ரமளானில் விட்டு விட்டு பெருநாளில் ஆரம்பித்து விடுவதையும் புகை பிடிப்பவர்கள் நோன்பு திறந்தவுடன் தம் அடித்து விட்டுத்தான் மஃக்ரிபையே கடமையாக்கி கொண்டுள்ளனர்.

 

இது போன்ற காரியங்களைத்தான் இந்த ஹதீஸ் விட்டுவிடுமாறு அறிவுறுத்துகிறது. அதை விடாத பட்சத்தில் நாம் நோன்பு நோற்பதில் எந்தப் பலனும் இல்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கூறுகிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் நோன்பால் நமக்கு கிடைத்த இறையச்சம் எட்டு முஸல்லி வருச முஸல்லியாக இருக்காமல் ஐவேலை தொழுகையை வருடம் முழுவதும் பேனக்கூடியவர்களாக நம்மை உருவாக்க வேண்டும். முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணிக்க வேண்டும் என்ற சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். இஸ்லாம் அனுமதிக்காத எந்த செயலுக்கும் நம் வாழ்வில் இடம் தரக்கூடாது. இது போன்ற எந்த மாற்றமும் இல்லாமல் நம்மை ரமளான் கழிந்து செல்லுமேயானால் அந்த ரமளானால் நமக்கு எந்தப் பலனும் இல்லை என்றே பொருள்.

 

ரமளானை பயனுள்ள வகையில் கழிக்காதவரை நம்மால் அதற்கான முழுமையான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது.

 

பயனுள்ள வழியில் ரமளானை எப்படிக் கழிப்பது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்

'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)

ரமளானை தம் வாழ்நாளில் பெற்று நம்முடைய முந்தைய பாவங்கள் மண்ணிக்கபடாமல் போனால் அது எவ்வளவு பெரிய நஷ்டம் அல்லாஹ் நமக்கும் தரும் வாய்ப்பை நழுவவட்டதாக ஆகிவிடுமா இல்லையா? அதனால் மறுமையில் கிடைக்கும் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்கவேண்டும்.

'நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'; என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி

'யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'; என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களை படித்தபிறகு நீங்களே அல்லாஹ் எவ்வளவு அந்தஸ்தையும் சலுகைகளையும் நோன்பாளிக்கு வழங்கிறான் என்று கூறுவதைப் பார்க்கலாம். அதை விட மிகப்பெரிய அந்தஸ்து அல்லாஹ்வை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி, அதை அல்லாஹ்வே இரண்டு மகிழ்ச்சிகள் என்று சொல்லிக்காட்டுகிறான். ஒரு சினிமாக்காரனை பார்க்க எந்த அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ அகில உலகத்தையும் படைத்து பராமரித்து மனிதனுக்கு தேவையானவையெல்லாம் வழங்கி அவன் வாழ அழகான இஸ்லாம் என்ற வழியையும் காட்டிய ரப்புல் ஆலமீனை காண நாம் எந்த அளவுக்கு ஆர்வம் காட்ட வேண்டும்.

 

ரமாளானில் செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

நீங்கள் ஒரு நாளில் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லரங்களுக்கு நிகரானது.

 

உலகில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு நாம் காட்டும் ஆர்வம் அல்லாஹ்வின் இந்த மகத்தான கருணைக்கு காட்டுவதில்லை.... பெழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை...

 

டிவி, இன்டர்நெட், மொபைல் போன்கள் மூலமோ அல்லது தூங்கியோ முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை கழிப்பதிலேயே குறியாக இருக்கும் நம் மக்கள். அல்லாஹ்வின் மகத்தான கூலியை தேடுவதில் முனைப்புக் காட்டுவது இல்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் இந்த அறிவிப்புகளை நேரில் காணாததால் அதன் சக்தி தெறியவில்லை. உலகில் எந்தவிதமான வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள்ளவும் நிகரானது இல்லை.

 

ஆகவே கடந்தது கடந்ததாக இருக்கட்டும் இனி மீதமிருக்கும் நாளிளாவது நம்மால் முடிந்த நல்லகாரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கெள்ள முயற்சி செய்வோம். அடுத்த ரமளானை நாம் அடைவோம் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.

 

தொழுகையை சரியான முறையில் கடைபிடிப்பது, குர்ஆன் ஓதுதல், பயான் கேட்பது, இஸ்லாத்தை தெறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, குர்ஆனை தமிழில் படிப்பது, அல்லாஹ் தருவான் என்ற எண்ணத்தில் தாராளமாக தான தர்மம் செய்வது பொன்றவை இம்மாதத்தில் செய்யவேண்டிய முக்கியமான வணக்கங்களாகும்.

 

அல்லாஹ் நம் அனைவரையும் வெற்றி பெற்ற மக்களோடு உள்ளவர்களாக ஆக்கி அருள்புறிவானாக.