நோபல் பரிசு விழாவில் கலந்து கொள்ள சீனா, ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட 6 நாடுகள் புறக்கணிப்பு

20/11/2010 19:32

 நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சீனா, ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட 6 நாடுகள் மறுத்துவிட்டன.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீனாவைச் சேர்ந்த லியு ஜியாபோவுக்கு அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. லியு சீன அரசின் அதிருப்தியாளர் ஆவார். இதனால் சீன அரசு கடும் கோபத்துடன் உள்ளது. நார்வே அரசையும் அது கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த நிலையில், சீனா உள்ளிட்ட ஆறு நாடுகள், நோபல் பரிசு வழங்கும் நிழ்ச்சியை புறக்கணிக்கவுள்ளன.

இது குறித்து நோபல் இன்ஸ்டியூட் தலைவர் கெய்ர் லன்டெஸ்டாட் கூறியதாவது,

இன்று காலை வரை 36 நாடுகளின் தூதர்கள் எங்கள் அழைப்பை ஏற்றுள்ளனர். 16 பேர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 6 பேர் நிராகரித்து விட்டார்கள்.

சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கியூபா, மொராகோ, ஈராக் ஆகிய 6 நாடுகள் எங்கள் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டன என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு அனைத்து நாட்டு தூதர்களும் அழைக்கப்படுவார்கள். அவர்கள் நவம்பர் 15-ம் தேதிக்குள் தாங்கள் வருவதும், வராததும் பற்றி தெரிவிக்க வேண்டும்.

லியூவுக்கு நோபல் பரிசு அளித்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்று பெய்ஜிங் எச்சரித்துள்ளது. 54 வயதாகும் லியூ, சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் முக்கியப் பிரமுகர் ஆவார். தற்போது 11 ஆண்டு சிறைவாசத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்லோவில் இருக்கும் சீன தூதரகம் இந்த நோபல் பரிசு விழாவை புறக்கணிக்கும்படி பிற நாட்டு தூதரகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.

இன்னும் எந்தெந்த நாடுகள் தங்கள் நிலை பற்றி தெளிவுபடுத்தவில்லை என்பதைத் தெரிவிக்க லன்டெஸ்டாட் மறுத்துவிட்டார். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா தூதரகங்கள் தங்கள் நாட்டு அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகே இந்த அழைப்பை ஏற்க முடியும் என்று கூறியுள்ளன என்று நார்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையை மிகைப்படுத்த வேண்டாம் என்று லன்டெஸ்டாட் எச்சரித்தார். ஏனெனில் சில தூதர்கள் ஏதாவது காரணங்களுக்காக வராமல் இருப்பது வழக்கம்.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த விழாவுக்கு 10 நாட்டு தூதர்கள் வரவில்லை. அவர்கள் வராததற்கு ஏதாவது அரசியல் காரணம் இருக்கும். தூதர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ரஷ்ய தூதரைத் தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் வரவில்லை என்று கேட்டால் நான் ஆஸ்லோவில் இல்லை. அதனால் தான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பார் என்று அவர் தெரிவித்தார்.

oneindia.com