பட்டதாரி சிறுபான்மை மொழி, பாட ஆசிரியர், கணினி பயிற்றுநர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பி்ன் படி வரும் 18ம் தேதி நேர்காணல்

13/10/2010 16:31

பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்(சிறுபான்மை மொழி, பாடங்கள்), கணினி பயிற்றுநர், தமிழ்நாடு வீட்டு வசதிக் கழக நிர்வாக இயக்குநரால் அறிவிக்கை செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணி காலியிடங்களுக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை மொழி, பாட ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு பட்டப் படிப்புடன் சிறுபான்மை மொழிப் பாடங்கள் படித்திருக்க வேண்டும். கணினி பயிற்றுநர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி (கணினி அறிவியல்), பி.சி.ஏ., பி.எஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி) ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்துடன் பி.எட். தேர்ச்சியும் அவசியம்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 கல்வித் தேர்ச்சியுடன் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பொதுப் போட்டியாளருக்கு 30 வயது 31.3.2010 அன்று முடிவடைந்திருக்கக் கூடாது. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

இத்தகுதியுள்ள பதிவுதாரர்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இம்மாதம் 18 ஆம் தேதி நேரில் அனைத்துக் கல்விச் சான்றுகளுடன் சென்று தங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்ட விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani