புதுவலசையில் ஏகத்துவமும் இயக்கமும் தோன்றிய வரலாறு

31/10/2010 20:04

தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து வந்த பாதையை அறியாமலேயே இருக்கிறார்கள். இதனால் நம்முடைய நியாயமான வாதங்கள் நம்முடைய மனநிலையிலிருந்து புறிந்து கொள்ளாமல், குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்து வைக்கின்றனர். அவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், புதிய ஏகத்துவவாதிகளுக்கு வளர்ச்சியின் பின்னனியை எடுத்துரைக்கவும் இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

 

ஏகத்துவத்தின் துவக்கம்

1990களில் தமிழகத்தில் ஏகத்துவம் துளிர்விட்ட காலம். வளைகுடாவில் வாழ்ந்த நமதூர் மக்களுக்கு இந்த ஏகத்துவம் கிடைத்து அதனால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் M.K. பதுருதீன் அவர்கள், S.S. முஹம்மது இபுறாகீம் அவர்கள், S. சேகு அலாவுதீன் அவர்கள், பசுலுதீன் அவர்கள், முஹம்மது களஞ்சியம் அவர்கள், முஹம்மது இக்பால் அவர்கள் மற்றும் ஹாஜா முஹைதீன் ஆகியோர் ஆவர். குறிப்பிடப்பட்ட இவர்களின் மூலம் சகோதரர் நியாஸ் அஹமது மற்றும் சதக்கத்துல்லா கான் ஆகியோருக்கு ஏகத்துவம் கிடைத்தது.

 

அன்று தன்னை ஏகத்துவவாதிகளாக அடையாளம் காட்டிக்கொள்ள முடியாத நிலை இருந்ததால் பெரும்பாலானோர் அதை காட்டிக் கொள்ளாமலேயே இருந்தனர். சகோ. பதுருதீன் அவர்கள் ஆலிம்களிடமும் மற்ற ஆர்வமுள்ளவர்களுடனும் கேள்விகள் கேட்டும் வெளி்ப்படையான விவாதங்களையும் செய்து வந்தார்கள். சகோதரர் S.S. முஹம்மது இபுறாகீம் அவர்கள் புதுவலசையில் முதன் முதலில் M.S. சுலைமான் அவர்களை வரவழைத்து நமதூர் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளியில் ஒரு மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்ப்பாடு செய்தார்கள். அதற்க்கு ஊரில் பல எதிர்ப்புகள் கிளம்பி நமதூர் மக்களில் சிலர் நிகழ்ச்சி நடக்காமல் தடுக்க மின்சாரத்தை துண்டித்து இடையூறு செய்தார்கள். ஆனால் அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையால் அந்த நிகழ்ச்சி சிறப்பாகவே நடைபெற்றது.

 

இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு வாக்கில் வளைகுடாவிலிருந்து வரும் ஏகத்துவவாதிகளிடம் புத்தகம் மற்றும் பொருளாதாரம் பெற்று நமதூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் பூட்டியிருக்கும் பாத்திரங்கள் வைக்கும் அறையில் வைத்து ”இஸ்லாமிய நூலகம்” என்ற பெயரில் நூலகம் துவக்கப்பட்டு ஏகத்துவ பிரச்சாரம் வெளிப்படையாக செய்யப்பட்டது.  

 

இயக்கத்தின் துவக்கமும் அதன் பின்னனியும்

இந்நிலையில் 1996 உள்ளாட்சித் தேர்தல், புதுவலசை மக்களின் பெரும்பாலானோருக்கு வாழ்கையில் மறக்கமுடியாத சில நிகழ்வுகள் நமதூரில் நடந்தேரின. அந்த நேரத்தில் தான் சகோதரர் ஜபருல்லாக்கான் அவர்களின் அரசியல் பிரவேசம் துவங்கியது. ஒரு சிலர் விளையாட்டாக துவக்கிய அந்த நிகழ்வு பின் மிகப் பெரிய விபரீதமாக மாறியது. ஜமாஅத் நிர்வாகம் அன்றைய திமுக மெஜாரிட்டியில் இருந்தது. முதன் முதலில் நமதூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலும் அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அதற்க்கு முன்பெல்லாம் ஜமாஅத்தில் யாரையாவது நியமனம் செய்வார்கள், போட்டிக்கு ஆள் இருக்காது.

 

ஆனால் 1996 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் சகோ. ஜபருல்லா கானும், திமுக சார்பில் சகோ. குத்புதீன் அவர்களும் போட்டியிட்டனர். ஊருக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அதிக இளைஞர்களின் ஆதரவில் அதிமுக போட்டியாளர் களத்தில் இருந்தார். பாரம்பரிய அரசியல் கட்சி மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் என்ற பலத்துடனும் திமுகவினர் களமிறங்கினர்.அந்தத் தேர்தலில் சகோ. ஜபருல்லா கான் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார். அதன் பின் திமுக ஜமாஅத்திற்க்கும் அதிமுக பிரமுகர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.

 

அதைத் தொடர்ந்து 1998 ம்வருடம் நமதூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சகோ. ஹாஜா அவர்கள் மறைவுக்குப்பின் 6 மாதங்களில் ஊராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஜமாஅத் சார்பாக திமுகவைச் சேர்ந்த சகோ. பௌசுல்கான் அவர்களை தேர்வு செய்தனர். ஜமாஅத்துக்கு போட்டியாக அதிமுக சார்பில் சகோ. ஜவஹர் அலி அவர்கள் போட்டியிட்டார். அதில் ஜமாஅத் நிர்வாகமே மானப்பிரச்சனையாக கருதி வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தது, ஜமாஅத்தை பகைத்துக் கொள்ளாமல் திமுக வேட்பாளருக்கு ஓட்டுப்போடச் சொல்லி வளம் வந்தனர். அதிலும் ஜமாஅத் வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். அதன்பின் தான் அவர்கள் ஜமாஅத்துக்கு எதிராக செயல்படத் துவங்கினர்.

 

ஒரு ஊர் என்று சொன்னால் அதிமுக, திமுக, முஸ்லிம் லீக் போன்ற அரசியல் கட்சியிலும், ஜிகாத் கமிட்டி போன்ற இன்னும் பல இயக்கங்களிலும் மக்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆனால் ஜமாஅத் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுவானதாக நடந்து கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு தீங்கிளைக்கவோ அல்லது ஜமாஅத் நிர்வாகமே நம் கையில் உள்ளது என்று அவர்களை அச்சுருத்துவதோ, பலிவாங்குவதோ ஒரு ஜமாஅத்திற்கு அழகாக இருக்காது. ஆனால் அன்று இந்த அவலம் நம் ஜமாஅத்தில் இருந்தது. 

 

ஜமாஅத் கூட்டங்களே அரசியல் கூட்டங்களைப் போல் இருக்கும், எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் போரே நடக்கும். அதோடு மட்டுமின்றி ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் அதிமுக, திமுக தகறாறு அடிதடியாக மாறி பலர் காயமுற்றனர், பிரச்சனை போலீஸ் கேஸாக மாறியது. அதிமுக சார்பில் காயமுற்ற சகோ. ஜபருல்லா கான் மற்றும் சகோ. முஹம்மது அலி அவர்களும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதற்க்கு போட்டியாக திமுக சார்பில் சகோ. அப்துல் முனாப் அவர்களுக்கு கட்டுப்போட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிமுக வினருக்கு எதிராக எதிர் வழக்குப் போடப்பட்டது.

 

அன்று 1996 மற்றும் 1998 தேர்தல்களில் நமது ஜமாஅத்தின் நிலைபாடு முற்றிலும் தவறானது. திமுக சார்பில் இவரும் அதிமுக சார்பில் அவரும் போட்டியிடுகின்றனர் ஓட்டுப் போடுவது மக்களின் விருப்பம். யார் வெற்றி பெறுகிறாறோ அவர் ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு ஊர் வளர்சிக்காக பாடுபட வேண்டும் என ஒதுங்கியிருக்க வேண்டும். அன்று அவர்கள் செய்த தவறு நமக்கு ஜமாஅத் என்றாலோ அரசியல் என்றாலோ வெறுப்பு ஏற்பட்டது.

 

தொடர்ந்து பிரச்சனைகளும் சண்டைகளும் நடைபெற்று வந்தன. திமுக சார்பில் தீப்பொரி ஆறுமுகத்தை வைத்தும் அதிமுக சார்பில் செல்வகணபதியை வைத்தும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அது மட்டுமில்லாமல் அதிமுக மற்றும் திமுகவினர் புதுவலசையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள உறுப்பினர் படிவங்களில் பெயர் சேர்க்கிறோம் என்று சொல்லி போட்டி போட்டுக் கொண்டு ஊரில் உள்ள இளைஞர்களை தம்பக்கம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த நேரத்தில் தான் நமதூர் ஏகத்துவ இளைஞர்கள் புதிதாக துவக்கப்பட்ட தமுமுக உறுப்பினர் சேர்ப்பு படிவத்தை வைத்து, கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஏன் கொடிப்பிடிக்க வேண்டு்ம் வாருங்கள் சமுதாயத்திற்க்காக கொடிப்பிடிப்போம் என்று கூறி சுமார் 50 நபர்களை இணைத்து தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அந்த நேரத்தின் அரசியல் பிரச்சனைகளும், அரசியலுக்காக நடந்த வரம்புமீரல்களும், குடி கூத்து என்ற அவர்களின் நடவடிக்கையும் நமக்கு எரிச்சலை ஏற்படுத்திய போது. 1. தொழுகையை நிலைநாட்டக்கூடியவர்களும், 2. மது, சூது, புகை மற்றும் வெளிப்படையான குற்றங்களில் ஈடுபடாதவர்களும், 3. சமூக அக்கரையுடன் பணியாற்றும் எண்ணம் உள்ளவர்களும், 3. அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களும், 4. வரதட்சனை வாங்காதவர்களும் தான் தமுமுக வில் இருக்க முடியும் என்ற கட்டுக்கோப்பான கட்டளைகள் நமதூர் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது, அதில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் தூண்டியது.  

 

அதன் பின் 2001 ஆம் ஆண்டு கேவை பொதுக்குழுவுக்கு சில நாட்கள் முன்பு சகோ. தமீமுன் அன்சாரி (அன்று மாணவரணி தலைவர், இன்று மமக துணை பொதுச் செயலாளர்) அவர்களைவைத்து நமதூரில் ஒரு வீட்டின் முற்றத்தில் சுமார் 30 பேர் கலந்து கொண்ட தமுமுக கிளை துவக்கக் கூட்டம் நடைபெற்றது. மேலும் தவறு செய்பவர்கள் நிர்வாகத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் அவர்கள் நீக்கப்பட்ட காரணத்துடன் ”உணர்வு” பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்படும் என்றும், ஒரு போதும் இந்த மக்களை காட்டி அரசியலுக்கு வந்து ஓட்டுப்பிச்சை கேட்க மாட்டோம் என சகோ. தமீமுன் அன்சாரி பேசியது அந்த இளைஞர்களை சிலிர்க்க வைத்தது என்றே சொல்லாம். ஆனால் அதில் கலந்து கொண்டவர்களில் பலர் வீட்டில் பிரச்சனை என்ற சொல்லி விளகிக் கொண்டது போக சுமார் 10க்கும் குறைவானவர்களே இயக்கத்தில் தொடர்ந்தனர்.

 

தொடர்ச்சியான இடையூறுகள்

 

அந்த காலகட்டத்தில் (2001) சகோ. சதக்கத்துல்லா கான் மற்றும் சகோ. முஹம்மது இபுறாகீம் ஆகியோர் சகோ. அஹமது அமீன் ஆலிம் அவர்களின் பின் நின்று தொழமாட்டோம், அவர் தர்ஹாலுக்கு செல்கிறார், அதனால் இணைவைப்புக் காரியத்தை செய்யக்கூடியவராக இருக்கிறார் என்று சொல்லி தனியாக தொழுகைக்கு ஜமாஅத் நடத்திவந்தனர்.  

 

இது ஜமாஅத் நிர்வாகிகள் மத்தியில் பெரும் பிரச்சனையாக கிளம்பியது. அவர்கள் இரண்டுபேரையும் கூட்டத்தி்ல் நிறுத்தி குழப்பம் விளைவிக்க மாட்டோம் என எழுதி அதில் கையெழுத்து வாங்கினார்கள். அதற்க்கு பல இளைஞர்கள் எதிர்ப்புத் தெறிவித்தனர். அதன் பின் ஏகத்துவம் வளரத் துவங்கியது. முமுச வில் இயங்கி வந்த நூலகம் சந்திரன் கடைக்கு முன் பிரண்ட்ஸ் லைட்ஸ் அருகில் உள்ள கடைக்கு மாற்றப்பட்டது.

 

ஏகத்துவவதிகளுக்கு உள்ளுர் ஜமாஅத்தும் மக்களும் பல எதிர்ப்புகளும், தொடர்ச்சியான இடையூறுகளும்  கொடுக்கலானார்கள். ஜமாஅத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து விடுவோம் என்றும் தீவிரவாதிகள் என போலீஸ் பிடித்துச் சென்றுவிடும் என்றும் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருந்தது. மேலும் தாய் தந்தையர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி உங்க மகன் அல்லது சொந்தக்காரப்பையன் இப்படி செயல்படுகிறான் சொல்லிவையுங்கள் என நெருக்கடி கொடுத்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தந்தைமார்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் ஏகத்துவவாதிகளை ஒடுக்க முயற்சி செய்தனர். இதனால் பல்வேறு பிரச்சனைகளையும் மனஅழுத்தத்தையும் சந்திக்க நேரிட்டது. தாய், தந்தையர் இடையேயும் உறவினர்கள் இடையேயும் பகைமையை சந்திக்க நேரிட்டது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற வசனத்திற்கேற்ப்ப தடைக்கற்க்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றினால் வல்ல ரஹ்மான், அல்ஹம்துலில்லாஹ்....

 

அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவோம் என்று கூறியதாலும், திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்தான் இஸ்லாத்தின் அடிப்படை என்றும் வேறு யாரையும் எதனையும் பின்பற்றக் கூடாது என்றும் பகிரங்கமாக முலங்கியதன் விளைவாக ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தோம்.

 

இதனிடையே ஜமாஅத் உலமா சபையில் இருந்து ஏகத்துவத்திற்கும் அதை பின்பற்றுபவர்களுக்கும் எதிராக தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் சில குறிப்பிட்ட வாசகங்களை எழுதி பள்ளவாசல்களில் போர்டு வைக்க கோரியிருந்தது. அதன் மூலம் ஏகத்துவவாதிகளின் வணக்கவழிபாட்டு உரிமையை பறிக்க ஜமாஅத்உலமா முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்த அனைத்து ஜமாஅத்துக்கும் அனுப்பியது. அந்த சுற்றறிக்கையின் விளைவாகத்தான் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒரேமாதியான வாசகங்கள் அடங்கிய, குறிப்பாக 1. அத்தஹிய்யாத்து இருப்பில் விரல் அசைப்பது, 2. நெஞ்சில் கைகட்டுவது, 3. 20 ரக்கஅத் தராவிஹ் தொழுகையில் கலந்துகொள்ளாதது 4. தொப்பி அணியாதது மற்றும் 5. 4 மதஹபுகளை பின்பற்றாதது ஆகியவைகளை செய்யாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என எழுதி போர்டு வைத்து பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என தடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் ஏகத்துவவாதிகள் பல்வேறு கொடுமைகளை சந்தித்தார்கள். குறிப்பாக தொழுது கொண்டிருக்கும் போது கை விரலை வளைத்து ஒடிப்பது. வழுக்கட்டாயமாக தொப்பி போடச் சொல்வது, தொப்பி போடாவிட்டால் தொழ விடாமல் தடுப்பது போன்ற அராஜகங்கள் அறங்கேற்றப்பட்டன.

 

இதனால் விரக்தியடைந்து வெகுண்டெழுந்து தொப்பி போடமாட்டோம் உங்களால் என்ன செய்யமுடியும் என்று எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களை பள்ளியிலிருந்து தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என போராடினோம். நம்முடைய வேகமும் கேள்விக்கணைகளும் ஆளும் வர்கத்திற்க்கு பெரும் சவாலாக இருந்தது. முற்றிலுமாக ஒடுக்கிவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டனர். ஆனால் எந்தவித பாதுகாப்பும் பின்பலமும் இல்லாத ஏகத்துவவாதிகளை அல்லாஹ் கைவிடவில்லை, கைவிடவும் மாட்டான்.

 

இத்தனை நெருக்கடிக்கும் கலங்கிடாத ஏகத்துவவாதிகளை சமூக அக்கறையற்ற சில துரோகிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி காவல் துறைக்கு மொட்டப் பெட்டிசன் போட்டனர். விசாரிக்க வந்த உளவுத்துறை அதிகாரிகளை முன்அனுபவம் இல்லாத, இதுபோல் சந்தித்திறாத இளைஞர்கள் எதிர்கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தந்தனர், பின் நூலகத்தை ஆய்வு செய்து அங்கிருந்த சில புத்தகங்களை ஆய்வு செய்ததற்க்கான அடையாளமாக எடுத்துக் கொண்டு உளவுத்துறை அதிகாரிகள் சென்றனர். 

 

அத்துடன் நின்றுவிட வில்லை தொடர்ந்து 3 மொட்டப் பெட்டிசன் போடப்பட்டது. இறுதியில் தன்னுடைய பெயரைக் குறிப்பிடத் திராணியில்லாதவர்கள் நூலகத்திற்க்கு எதிரில் கடைவைத்திருந்த சந்திரன் பேரில் பெட்டிசன் போட்டார்கள். சந்திரனையும் எங்களையும் விசாரித்த உளவுத்துறையினரிடம் இது போல் மொட்ட பெட்டிசனால் நாங்கள் மிகுந்த மனஉழைச்சலுக்கு ஆலாகிவருகிறோம் இதற்க்கான தீர்வு என்ன என்று கேட்டதற்க்கு அந்த உளவுத்துறை அதிகாரி சொன்னார் உங்க ஆளுங்கதான் பெட்டிசன் போடுறாங்க, அரசாங்கம் விசாரிக்கச் சொல்கிறது, விசாரனை நடத்துவது எங்கள் வேலை என்று கூறிவிட்டு உங்கள் இயக்கத்தின் மூலம் நீங்கள் காவல்துறை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் செய்துவிட்டுச் சென்றார்.

 

அதன்பின் பிரண்ட்ஸ் லைட்ஸ் அருகில் இருந்த நூலகத்தை அகற்றச் சொல்லி அந்த கடையின் உரிமையாளர் கடைக்கு பூட்டுப் போட்டார். நம்மை கேட்காமல் பூட்டுப் போட்டதையும், அவகாசம் இல்லாமல் காலி செய்யச் சொன்னதற்கும் எதிராக போராடி அந்த மாதத்திலேயே மஸ்ஜிதுல் அக்பர் பள்ளி அருகே மாற்றப்பட்டது.

 

பின் நமது சகோதரர்கள் ஜமாஅத் மற்றும் சங்கத்தில் அங்கம் வகிப்பதைத் பொருத்துக் கொள்ளாமல் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். ஒரு சகோதரர் சங்கத்தில் இருந்தால் சிலருக்கு அங்கு காரியம் சாதிக்க இயலாது என்று எண்ணி அவரை ஜமாஅத் நிர்வாக்திற்க்கு மாற்ற பரிந்துரை செய்தனர். ஜமாஅத் நிர்வாகிகள் தேர்தலில் அவரது (நான் அனுபவம் இல்லாதவன், பெரியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறீர்கள் நீங்கள் இருந்து செயல்படுங்கள் என்ற) எதிர்ப்பையும் மீறி (இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று கூறி) அவர் ஜமாஅத் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கூட்டத்தில் பல முன்னால் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்ந்தெடுத்தபின் அவரை சில அரசியல் வாதிகள் ஜமாஅத்துக்கு கட்டுப்படாதவன் என்று கூறி ஜமாஅத்தில் இருந்து நீக்க மறைமுகமாக காய்நகர்த்தி அவரது உறவினர்கள் மூலமும் பெற்றோர் மூலமும் அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைத்தனர். காரணம் எத்தனையோ முன் அனுபவம் உடையவர்கள் தங்கள் பதவிகளை இழந்தநிலையில் ஒரு இளைஞனுக்கு அதுவும் நம்மை வெளியேற்ற துணைநின்றவனுக்கு ஜமாஅத்தில் பதவியா என்ற எண்ணத்தில் செயல்பட்டனர். அவர்களது தொடர்ச்சியான நெருக்கடிகளும், ஜமாஅத் நிர்வாகத்திற்க்கு அவர்கள் வந்த உடனேயே நமக்கெதிராக நடந்துகொள்வதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.

 

அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவு

அடக்க நினைத்தவர்களின் அடக்க நினைத்தவர்களை எதிர்த்து நாம் வளர ஆரம்பித்தோம், காரணம் அவர்களிடம் இருந்த தூய்மையற்ற தன்மை, ஆதிக்கப் போக்கு இவைகளை எதிர்த்து எதிர்நீச்சல் அடித்தால்தான் நமது உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற நிலை, எதிர்க்க ஆரம்பித்தோம், கேள்விகேட்க ஆரம்பித்தோம்.

 

இந்தக் காலகட்டத்தில் (2002-2003) ஜமாஅத் மற்றும் சங்கத்தில் இருந்து நமது இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகாளல் ஆதிக்க சக்திகளிடமிருந்து ஜமாஅத்தையும் சங்கத்தையும் மீ்ட்டு ஊழல் பேர்வழிகளை அடையாளம் காட்டி அனைத்தையும் மாற்றியமைக்கப்பட்டது. அரபிஅப்பா கொடியேற்றம், முஹைதீன் கந்தூரி போன்ற மார்க்ததுக்கு முறணான காரியங்களை ஜமாஅத் செய்யாமல் தடுத்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டு பின் வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டுவருகிறது. வரதட்சணை இல்லாத பல்வேறு எளிய திருமணங்களை ஏகத்துவவாதிகள் செய்தும் காட்டினர். ஏக்ததுவவாதிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாத எத்தனையோ சகோதரர்கள் வரதட்சனை இல்லாமல் திருமணம் முடிப்பதற்க்கு நாம் தூண்டுகோலாக இருந்தோம். அல்ஹம்துலில்லாஹ்...

 

2004ல் இயக்கம் இரண்டானது, இதில் பளைய ஏக்ததுவவாதிகளில் பெரும்பாளானோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலும் மற்றவர்கள் தமுமுகவிலும் அங்கம் வகிக்கின்றனர்.  

 

அதைத் தொடர்ந்து ஏக்ததுவப் பிரச்சாரத்தை ஊருக்குள் சீடி, ஆடியோ, வீடியோ மற்றும் புத்தகங்கள் மூலம் ஏகத்துவம் மக்களுக்கு எத்திவைக்கப்பட்டு வருகிறது. தெரு முனைப்பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என சமுதாய மற்றும் மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மக்களை அழைத்துச் செல்வதும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. மர்ர்க்கத்திற்கு முறணான காரியங்களையும், வீண்விரையங்களையும் இன்றும் கண்டித்து வருகிறோம். அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த ஒரு செயலும் இஸ்லாம் ஆகாது. அதற்க்கு நன்மை கிடைக்காது. தவறான காரியங்களால் நரக நெருப்பை சுவைக்க நேரிடும் என எடுத்துரைத்தும் வருகிறோம். ஊரில் உள்ள பெரும்பாலானோர் சொந்த பந்தங்காளகவே இருக்கினறனர். எனவே அவர்களுக்கு அல்லாஹ்வுடைய மார்கத்தை எடுத்துரைக்க வேண்டும் எனவும் தவறான வழியில் இருந்து தடுக்கக்கூடிய உரிமையும் கடமையையும் உணர்ந்து தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

 

தனிப்பள்ளிக்கான காரணம் என்ன?

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நமதூர் அரபி அப்பா தர்ஹாவில் மௌலுது பாட்டு நிகழ்ச்சி துவங்கியது அதன் ஒலிப் பெருக்கி போதாது என்று மஸ்ஜிதுல் அக்பர் பள்ளி குலாயில் இணைத்து ஊருக்கே பாட்டுப் போட்டனர். அதை எதிர்த்து நம் சகோதரர்கள் இனிமேலும் இந்த இமாம்களை பின்பற்றி தொழ முடியாது என தனித்து ஜமாஅத் நடத்தி வந்தனர். அதன் பின் சகோ. S.S. முஹம்மது இபுறாகீம் அவர்கள் ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முயற்சியில் ஏக்ததுவவாதிகளுக்கும் நமதூர் ஆலிம்களுக்கும் இடையில் தர்ஹா சம்மந்தமாக விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் மக்களுக்கு போகப்போகத்தான் புறியவைக்க முடியும் என்றும் ஆலிம்களாகிய நாங்களும் ஏகத்துவத்தை மக்களுக்கு சொல்லத் தயார் என்றெல்லாம் பேசினார்கள் அவர்களின் பேச்சைக் கேட்டு மீண்டும் இமாம் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது வந்தோம்.

 

இந்நிலையில் 2009 ஜனவரி வருவதற்க்கு முன்பாகவே அன்று இருந்த நிர்வாகிகளிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் முந்தைய நிகழ்வுகளை மேற்கோள் காட்டி மீண்டும் ரஜப் மாதத்தில் அரபியப்பா மௌலுது ஓதுதை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.  ஆனால் அன்றைய நிர்வாகமோ நமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என்றும் சுன்னத்வல் ஜமாஅத் படி செய்வதாகவும் கூறினர். அதற்க்கு எந்த சுன்னத்வல் ஜமாஅத் இமாம் இப்படி ஓதச் சொன்னார், தர்ஹாலுக்கு போகச் சொன்னார் என்று கெள்வியையும் அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் மத்ஹபு இமாம்களான ஷாபியோ ஹனபியோ இதற்க்கு அனுமதிக்கவில்லை என்பதையும் ஏற்க்க மறுத்தது மட்டுமின்றி காலம் காலமாக செய்கிறோம் அப்படித்தான் செய்வோம் நீங்கள் செய்வதை செய்துகொள்ளுங்கள் என்று கூறி புறக்கணித்து விட்டனர்.

 

பின் ஊர் விவகாரங்களில் ஜமாஅத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது எனவும் மார்க்க விவகாரங்களில் தனித்து செயல்படுவது எனவும் தீர்மானித்து  தனித்து ஜமாஅத் நடத்தினோம். ஆனால் அதிலும் சில இடையூறுகள், ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது கூட மெளாலுது ராத்திபு ஓதுவதைத் தாமதிப்பதில்லை. வீம்புக்கு கத்துவது போன்ற முறையற்ற மறைமுகமான இடைஞ்சல்கள் கொடுத்து வந்தனர்.

 

ஜும்ஆ தொழுகைக்கு பனைக்குளம் சென்று தொழுதோம். பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டதால், முதலில் ஜும்ஆ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த காலங்களில் நடந்தது போல் ஒரு தோட்டத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தினோம். இதுவரை ஊரில் எந்த நடுநிலைவாதிகளும் இதற்க்காக வாய் திறக்கவில்லை. மாறாக நாம் பட்ட அவலங்களைக் கண்டு சந்தோசப் பட்டார்கள்.

 

ஜும்ஆவை தனியாகவும் மற்ற தொழுகைகளை தனி ஜமாஅத்தாக பள்ளிவாசலிலும் தொழுது கொண்டிருந்த நேரத்தில் சந்தித்த இடையூறுகளால் பள்ளிக்கு சென்று தொழும் ஆர்வம் குறையத் தொடங்கியது. பெரும்பாலானோர் வீட்டிலேயே தொழுது வந்தோம். இத்தைனை இடையூறுகளுக்கு மத்தியிலும் திருமறைக்குர்ஆனில்  9:107. தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திட வும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனை யும் நாடவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.9:108. அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

என்ற இந்த வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடிய பள்ளியில்தான் தொழ வேண்டும் என கட்டளையிட்டுள்ளதாலும் நாம் ஏன் தனியாக ஒரு பள்ளியை ஏற்படுத்திக் கெள்ளக் கூடாது என்று நிலம் வாங்க தீர்மானித்தோம். காயிதே மில்லத் நகர் பகுதிக்கு எப்படியும் எதிர் காலத்தில் பள்ளவாசல் தேவை என்பதால் அந்தப் பகுதியில் நிலம் பார்க்கத் துவங்கினோம். இனிவரும் பள்ளிகாளாவது ஏகத்துவப் பள்ளிகாளாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் எப்படியும் அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு இரண்டு பள்ளிவாசல்களையும் ஏக்ததுவ பள்ளிகளாக மாற்ற, மார்க்க விரேத செயல்களில் இருந்து மீட்க்க தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். அல்லாஹ் வெற்றியைத் தருவான் என நம்புகிறோம். தவ்ஹீத் வாதிகள் ஏன் தனியாக தொழுகின்றனர் என்ற கேள்விக்கான பதிலை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்>>>  or https://www.youtube.com/watch?v=5Ey-cudI1MI&feature=player_embedded

 

அப்படிப்பட்ட நேரத்தில் தான் அல்லாஹ்வுடைய அருளால் காயிதே மில்லத் நகரில் 5 செண்டு இடம் விற்பனைக்கு வந்தது. அன்றைய நிலையில் நூலகத்திற்கு வாடகை கூட 2 அலலது 3 மாத பாக்கியிருந்தது. ஆனாலும் அல்லாஹ் எப்படியும் தருவான் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினோம் முதலில் உள்ளுரில் 20,000 ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு குவைத்தில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு தகவல் கொடுத்தோம் குவைத்தில் இருந்த நமது ஏகத்துவ சகோதரர்கள் ஒரு செண்டு அரை செண்டுக்கு உத்தரவாதம் கொடுத்த உடன்  அங்கிருந்து ரூபாய் 60,000 ஒரு ஏகத்துவ சகோதரர் தமது சொந்தக் பணத்தை அனுப்பிவைத்தார். அதன் பின் கிடைத்த சிறு சிறு நன்கொடைகளை வைத்து ஓரளவுககு தற்ப்போது தொழுவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்பின் ஒரு 10 செண்டு இடம் வாங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்தக்கட்டுரைக்கு தகவல்கள் தந்து உதவிய நண்பர்களுக்கு நன்றி.....