பெரம்பலூரில் ராஜா ஆதரவு திமுக, அதிமுகவினர் மோதல்-பஸ் எரிப்பு

15/11/2010 20:58

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அதிமுகவினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையடுத்து அவர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பஸ் நிலையத்தில் இருந்த ஒரு பேருந்தை திமுகவினர் தீவைத்து எரித்தனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 11.30 மணிக்கு அரியலூருக்கு செல்ல அரசு பஸ் ஒன்று தயாராக நின்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீவைத்து பஸ்சுக்குள் வீசிவிட்டு சென்றனர். இதனால் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பயணிகள் அனைவரும் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பஸ் தீப்பிடித்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இருக்கைகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல, ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தாழ்த்தப்பட்டோர் இயக்கம் சார்பில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டினர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. நகர செயலாளர் ராமச்சந்திரன் அரிவாளை காட்டி தி.மு.க.வினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தி.மு.க.- அ.தி.மு.க. வினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசிக்கொண்டனர்.

இதையடுத்து அரிவாளை காட்டி மிரட்டிய ராமச்சந்திரனை உடனே கைது செய்யக்கோரி இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜெயலலிதா உருவ பொம்மைகளை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த மறியல் காரணமாக சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் பாலக்கரைக்கு விரைந்தனர். தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராமச்சந்திரனை உடனே கைதுசெய்கிறோம் என்று உறுதிகொடுத்தனர். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், வேப்பந்தட்டை மற்றும் செட்டிக்குளம் பகுதிகளிலும் தி.மு.க.வினர், ஜெயலலிதாவை கண்டித்து, மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பதட்டமான நிலை உருவாகியது.

மோதல் சம்பவம் தொடர்பாக தி.மு.க.வினரை மிரட்டிய பெரம்பலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ராமசந்திரன் மீதும் ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்த தி.மு.க.பிரமுகர்கள் அண்ணாதுரை, பாஸ்கரன் உள்பட 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பெரம்பலூரில் ராஜா பதவிவிலகியதை அதிமுகவினர் பட்டாசுவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பெரம்பலூர் ராஜாவின் சொந்த ஊராகும். முன்பு பெரம்பலூர் தொகுதி எம்.பியாக மூன்று முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நீலகிரி தொகுதி எம்.பியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

oneindia.com