மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள்...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/11/2012 19:17

36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத் தாங்கினார்கள்.
 
அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களையும் அவர்களின் எதிரிகள் சொல்லொண்ணாத இன்னல்களுக்கு உட்படுத்தினார்கள்.
 
சொந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற அளவுக்குக் கொடுமைகள் எல்லை மீறிய போது தமது தோழர்களில் ஒரு பகுதியினரை அபீஸீனியா நாட்டுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தார்கள்.
 
தாமும், தமது நெருக்கமான தோழர்கள் சிலரும் சொந்த ஊரில் இருந்து கொண்டு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தனர்.
 
நபிகள் நாயகத்தையே கொன்று விட எதிரிகள் திட்டம் தீட்டிய போது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இரவோடு இரவாக மதீனாவுக்குச் சென்றார்கள்.
 
இந்த ஊரில் இனி மேல் வாழவே முடியாது என்ற நிலையில் ஊரை விட்டுப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்வரும் உறுதி மொழியை இறைவன் வழங்கினான். (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். 'நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 28:85
 
இதன் பொருள் என்ன? எந்த ஊரிலிருந்து விரட்டியடித்தார்களோ அதே ஊருக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைவார்கள் என்பது தான் இதன் பொருள்.
 
ஒரு மனிதன் தோல்வியடையும் போது 'இறுதி வெற்றி எனக்குத் தான்' என்று கூறுவதைப் பார்க்கிறோம். தோல்வியடையும் நாட்டின் தலைவன் 'மீண்டும் வெல்வேன்' என்று கூறுவது சகஜமான ஒன்று தான்.
 
ஊரை விட்டு விரட்டப்பட்ட எத்தனையோ பேர் இதே ஊருக்கு மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்று சிலருக்குத் தோன்றலாம்.
 
தோற்றவர்கள் கூறுவது போல் சில வேளை நடக்கலாம். சில வேளை நடக்காமலும் போகலாம். அவர்கள் கூறியவாறு நடந்தால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அவர்கள் கூறியவாறு நடக்காவிட்டால் 'நான் மனிதன் தானே? ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்படிக் கூறி விட்டேன்' எனக் கூறிச் சமாளிப்பார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் மீண்டும் மக்கா வருவேன்' என்று கூறவில்லை. மாறாக 'உம்மை உமது இறைவன் மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான்' என்று இறைவனே தன்னிடம் கூறினான் என்பது தான் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு. அதாவது என்னை மக்காவுக்குள் மீண்டும் கொண்டு வருவதாக இறைவன் எனக்கு உத்தரவாதம் தந்துள்ளான் என்ற பொருள்படும் வகையில் அவர்களின் முன்னறிவிப்பு அமைந்துள்ளது.
 
இறைவனே இவ்வாறு கூறியதாக அறிவிப்பதென்றால் அது நிச்சயம் நிறைவேற வேண்டும். அவ்வாறு நிறைவேறாவிட்டால் அது இறைவன் கூறியதல்ல; முஹம்மது கற்பனை செய்து கூறியது என்று ஆகிவிடும். இதனால் முஹம்மது இறைத் துதர் அல்ல என்பதும் வெளிச்சமாகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கமே பொய் என்று ஆகி விடும்.
 
ஆம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு ஆறு ஆண்டுகளில் எவ்வித எதிர்ப்புமின்றி கத்தியின்றி இரத்தமின்றி மக்காவுக்குள் வெற்றி வீரராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அளித்த உத்தரவாதம் முழுமையாக நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதும் நிருபணமாகிறது.

37 பத்ருப் போரில் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற பின் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்லிம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வந்தனர்.
 
எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் பிரமுகர் அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
 
அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படை திரட்டி வந்தனர்.
 
வணிகக் கூட்டத்தை வழி மறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்லிம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திலிருந்து வாக்களிக்கப்பட்டது.
 
'எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான். திருக்குர்ஆன் 8:7
 
முஸ்லிம்களின் படை பலம் சுமார் 300 ஆக இருக்கையில் எதிரிப்படையினர் சுமார் 1000 நபர்கள் இருந்தனர். இந்த விபரம் முஸ்லிம் 1763 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
 
பலவீனமான நிலையில் இருந்த முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் முன்னறிவிப்புச் செய்தது போலவே போர் நடப்பதற்குச் சற்று முன்னர் மீண்டும் வெற்றியை உறுதி செய்து பின் வரும் வசனத்தை இறைவன் அருளினான்.

இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள். திருக்குர்ஆன் 54:45
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாரத்தில் இருந்து கொண்டு 'இறைவா! நீ அளித்த வாக்குறுதியை நீ நிறைவேற்றக் கோருகிறேன். இறைவா நீ நாடினால் இன்றைய தினத்துக்குப் பின் உன்னை வணங்க யாரும் இருக்க மாட்டார்கள்' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு 'அல்லாஹ்வின் துதரே போதும்; உங்கள் இறைவனிடம் கெஞ்ச வேண்டிய அளவு கெஞ்சிவிட்டீர்கள்' எனக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவசத்தை அணிந்து கொண்டு இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள் என்ற வசனத்தை ஓதிக் கொண்டே வெளியே வந்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பஸ் (ரலி) நூல் : புகாரி 2915, 3953, 4875, 4877
 
இயந்திரங்களும், வெடி மருந்துகளும் போர்க் கருவிகளாக பயன்படுத்தாத காலத்தில் எண்ணிக்கை பலத்தைக் கொண்டு மட்டுமே வெற்றி பெற முடியும். எதிரியின் பலத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களை விட எதிரிகள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தும் இறைவன் வாக்களித்த படி முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள்.
 
குர்ஆன் இறைவனின் வேதம் என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துதர் என்பதும் இதன் மூலம் நிரூபனமானது.
 
 

 

 
 

12-நபியின் மனைவையரில் முதலில் மரணிப்பவர் பற்றிய முன்னறிவிப்பு

Play Without Downloading  
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ


Make a website for free Webnode