மதுரை விமான நிலைய புதிய முனையம் இன்று திறப்பு

12/09/2010 20:25

ஒரே நேரத்தில் 7 விமானங்களை நிறுத்தவும், 500 பயணிகளை கையாளவும் ஏற்ற நவீன வசதிகளுடன், மதுரை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம் இன்று திறக்கப்படுகிறது.  ஒருங்கிணைந்த முனையம் 17,500 சதுர மீட்டரில், 128 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஏரோ பிரிட்ஜ் இணைப்புகள் ("ஏரோ பிரிட்ஜ் பிங்கர்ஸ்') கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் விமான நிலைய கட்டடத்தில் இருந்து, நேரடியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஏற்கனவே மதுரை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். புதிய முனையம் திறக்கப்பட்டதும் ஏழு விமானங்களை நிறுத்தலாம்.

பசுமை கட்டடம்: சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத,  மின்சாரத்தை சேமிக்கும் பசுமை கட்டடமாக ("கிரீன் பில்டிங்') புதிய முனையம் வடிவமைக்கப் பட்டு உள்ளது. ஆறு "எஸ்கலேட்டர்' (நகரும் படிக்கட்டு), ஆறு "லிப்டு'கள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களுக்கான எமிகிரேஷன், கஸ்டம்ஸ் பணிகளுக்கு தனியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்வதற்கான (செக் இன் ஏரியா) ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. புறப்படும் 250 பயணிகள், வந்துசேரும் 250 பயணிகள் என 500 பேரை ஒரே நேரத்தில் கையாளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைக்கிறார்.  அக்டோபரில் செயல்படும்: புதிய முனையக் கட்டடத்தை விமான நிலையங்கள் ஆணையக் குழும திட்ட உறுப்பினர் ராஹேஜா நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய முனையம் அக்டோபர் இறுதியில் செயல்படத்துவங்கும். இக்கட்டடத்தில் மழை நீர் சேகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீணாகும் கழிவு நீரை தனியாக பிரித்து பிளான்ட்டுகள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர் பணியமர்த்தப்படுவர், என்றார். தென்மண்டல நிர்வாக இயக்குனர் தேவராஜ், பொது மேலாளர் (திட்டம்) சுதாகர், மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையா பாண்டியன் உடனிருந்தனர்.

Dinamalar