மராட்டிய புதிய முதல்வர் பிரிதிவிராஜ் சவான்: சோனியாகாந்தி அறிவிப்பு

10/11/2010 15:59

மராட்டிய மாநிலத்தின் புதிய முதல்வர் பிரிதிவிராஜ் சவான் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.

மும்பையில் கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்கு கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் அசோக் சவானுக்கும் தொடர்பு இருந்தது தெரிந்தது. எனவே அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சோனியா முடிவு செய்தார். இதையடுத்து அசோக் சவான் தனது ராஜினாமா கடிதத்தை சோனியாவிடம் கொடுத்தார்.
 
இதை நேற்று சோனியா ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து அசோக் சவான் மராட்டிய கவர்னரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்து பதவி விலகினார்.
 
எனவே மராட்டியத்துக்கு புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது.


மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோர் மேலிட பார்வை யாளராக இருந்து கூட்டத்தை நடத்தினார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் தனித் தனியாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இறுதியில் சோனியா காந்திக்கு இதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தை முதல்-மந்திரி அசோக்சவான் முன் மொழிய மூத்த எம்.எல்.ஏ.க்கள் வழி மொழிந்தனர்.
 
இந்த தீர்மானம் மற்றும் கூட்டத்தில் நடந்த விவரங்களை இன்று காலை சோனியா காந்தியிடம் மேலிட பார்வையாளர்கள் கொடுத்தனர்.
 
இதை தொடர்ந்து புதிய முதல்வராக மத்திய மந்திரி பிரிதிவிராஜ் சவானை சோனியா காந்தி தேர்வு செய்து அறிவித்தார்.
 
முதல்வர் பதவி போட்டியில் மத்திய மந்திரிகள் சுஷில்குமார் ஷிண்டே, விலாசராவ் தேஷ்முக், பிரிதிவி ராஜ் சவான், முகில்வாஸ்னிக் ஆகியோர் முதலில் இருந்தனர்.
 
இதில் சுஷில்குமார் ஷிண்டே, விலாசராவ் தேஷ்முக் இருவரும் முன்னாள் முதல்வர்கள். அவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் வீடு ஒதுக்கீட்டு முறை கேட்டில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
 
எனவே அவர்களை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் விரும்ப வில்லை. முகுஸ்வாஸ்னிக் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் ஆனாலும் அவருக்கு கட்சியில் போதிய ஆதரவு இல்லை.
 
எனவே பிரிதிவிராஜ் சவான் மட்டுமே எஞ்சி இருந்தார். திடீரென மராட்டிய மந்திரிகள் பாலாசாகேப் தோரட், ராதாகிருஷ்ணவிகே பட்டீல், ஹர்சவர்த்தன் பட்டீல் முன்னாள் முதல்வர் நாராயணரானே ஆகியோரும் முதல்வர் பதவியை பிடிக்க களத்தில் குதித்தனர்.
 
இதில் நாராயண ரானே, ராதாகிருஷ்ண விகேபட்டீல், இருவரும் சிவசேனா கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர்கள். ஹர்சவர்த்தன் பட்டீல் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தவர்.
 
வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முதல்வர் பதவி வழங்க கூடாது என கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே இவர்கள் 3 பேருக்கும் வாய்ப்பு குறைந்தது.
 
பிரிதிவிராஜ் சவான், பாலாசாகேப் தோரட் இருவர் மட்டுமே போட்டியின் முன்னிலையில் இருந்தனர். இறுதியில் பிரிதிவிராஜ் சவான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.