மலேசிய உச்சநீதிமன்றம் மீது விமர்சனம்

23/11/2010 13:58

மலேசியாவில் சிறார்களை, அவர்களின் பெற்றோரில் ஒருவர் மற்றையவரின் அனுமதியின்றி,அதாவது தாய் அல்லது தந்தையின் விருப்பின்றி இஸ்லாம் மதத்துக்கு மாற்றமுடியுமா என்கின்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் அதிலிருந்து நழுவிச்செல்லும் போக்கைக் கடைப்பிடிப்பதாக அந்நாட்டு அதியுச்ச நீதிமன்றம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அங்கு முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் தொடர்புபடுகின்ற சட்டரீதியான சிக்கல்களை தெளிவுபடுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு இந்த நீதிமன்றத்துக்கு இருக்கின்றமையே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வாழும் மலேசியாவில், வழக்குகளில் எவ்வெப்போதெல்லாம் இஸ்லாம் தொடர்புபடுகின்றதோ அந்த நேரங்களில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் அதியுயர் தன்மையைப் பாதுகாக்கத் தவறிவிடுவதாக அனேகமான மனித உரிமைக்குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெற்றோரில் ஒருவர் மட்டுமே, மற்றவரின் சம்மதமின்றி குழந்தையை மதம் மாற்றிவிடமுடியுமா என்கின்ற சர்ச்சைக்கு, ஒரே தடவையில், இனிவரும் காலம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விதத்தில் தீர்ப்பொன்றை வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் முன்னாலுள்ள வழக்கு.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள தம்பதியர் இருவரும்
இந்து மதமுறைப்படி 1998ம் ஆண்டில் திருமணம் புரிந்துகொண்டுள்ளனர்.

பின்னர், கணவன் இஸ்லாத்துக்கு மதம் மாறியதோடு அவர்களின் இரண்டு குழந்தைகளையும் கூட ரகசியமாக மதம் மாற்றியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது,மனைவியான சத்தியசீலன் ஷாமலாவும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற சாதாரண நடைமுறைக் காரணத்தைக்காட்டி பிரதம நீதியரசர் வழக்கை தள்ளுபடிசெய்து விட்டார்.

குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழக்கொன்றில் கணவனுடன் இழுபறியிலிருந்த நிலையிலேயே ஷாமலாவும் குழந்தைகளும் ஏற்கனவே ஒஸ்ட்ரேலியாவுக்கு சென்றுவிட்டனர்.

இரட்டை வகை நீதி முறைமை

நாட்டின் இஸ்லாமிய நீதிமன்றம் இரண்டு குழந்தைகளினதும் பாதுகாவல் உரிமையை தந்தைக்கே வழங்கியிருந்த நிலையில், சிவில் நீதிமன்றங்களோ அவர்களின் பராமரிப்பை தாயிடம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மலேசியாவின் இரட்டை வகை நீதி முறைமைக்குள் உள்ள முரண்பாடுகளையே பிரதிபலித்துக்காட்டுகின்றன.

இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏற்புடையது.அதேநேரம் முஸ்லிம் அல்லாதவர்கள் சிவில் சட்டத்தின் கீழ் வருகிறார்கள்.

இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரும் முஸ்லிம் அல்லாதவரும் தொடர்புபடுகின்ற வழக்குகள் மலேசியாவில் பல குடும்பங்களை திரிசங்கு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.

அங்கு குழந்தைகளின் பராமரிப்பு உரிமையைப் பெற்றுக்கொள்ள எண்ணும் பெற்றோர், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தமக்கு சாதகமான பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக மலேசியாவின் சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.

கணவராலோ அல்லது மனைவியாலோ குழந்தைகள் ஒருதலையாக மதமாற்றப்பட்டு பிரித்து செல்லப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக அனேகமான பெற்றோர்கள் தமக்குள்ள ஒரே வழி நாட்டிலிருந்து தப்பிச் செல்வதே என அந்த சங்கம் தெரிவிக்கின்றது.

பெரும்பான்மை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கின்ற இவ்வாறான அடிப்படை சர்ச்சைகளை நாட்டின் அதியுச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்த்துவிடவேண்டுமென்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கை.
bbctamil.com