மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா மறுப்பு?: 40,000 பேர் மாயமானதின் எதிரொலி!

05/08/2010 09:14

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வேலைக்காக போன 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமானதன் காரணமாக அங்கு வரும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசு நிறுத்தி வைக்க யோசித்து வருகிறதாம்.

மலேசியா அழகிய நாடு என்று விளம்பரம் செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றனர். நம் நாட்டவரும் அங்கு என்ன தான் இருக்கிறது பார்த்துவிடுவோம் என்று மலேசியாவுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

இந்தியா மட்டுமின்றி சீனா, பூடான், நேபாளம், வங்காளதேசம், மியான்மர், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சுற்றலா சென்று வருகின்றனர். முன்பெல்லாம் மலேசியா செல்லும் சுற்றுலா பயணிகள் விசா பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், பாதுகாப்பு கருதி கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசா பெற்றால் அன்றி அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய முடியாது என்ற நிலை உருவானது.

இவ்வாறு சுற்றுலா விசாவில் மலேசியா சென்றவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லவில்லை. போனவர்கள் மலேசியாவிலேயே தங்கி விட்டனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் மலேசியாவில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலே இல்லை.

இதையடுத்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு விசா தருவதா, வேண்டாமா என்று மலேசிய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த தகவலை அந்நாட்டின் துணை பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார். இந்த விஷயம் பற்றி அன்மையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

https://thatstamil.oneindia.in/news/2010/08/04/indians-malaysia-visa.html