மழை சேதம்: நிவாரணப் பணிகளுக்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு

30/11/2010 13:41

தமிழகத்தில் தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் கருணாநிதி இன்று ஆய்வு செய்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.

 

 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

 

 

தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து, புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கருணாநிதி இன்று ஆய்வு செய்தார்.  

 

 

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் வீதமும்; உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா ரூ 10 ஆயிரம் வரையிலும்; தேவையான இடங்களில் உணவு வழங்கியும் மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

 

தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை மதிப்பீடு செய்து, சேதம் குறித்த அறிக்கை அனுப்பும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  பாலங்கள், சாலைகள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

மேலும் குடிசைகளை இழந்தோருக்கு -  முழுமையான அளவில் குடிசைகள் சேதம் அடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ 2 ஆயிரம் என்பதை ரூ. 5 ஆயிரமாகவும்; பகுதியாக குடிசைகள் சேதமடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கபட்டு வந்த ரூ ஆயிரம் என்பதை ரூ. 2 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

இந்த மழையினால் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani.com