மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நில வரி ரத்து, ஓய்வூதியம் 500 ஆக உயர்வு: முதல்வர்

25/11/2010 10:03

பயிர்ச்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளின் முழுவிவரம் அறிந்து, விவசாயிகளுக்கு இந்த ஆண்டிற்கான நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 

 

தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 

 

இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

 

 

இங்கு பேசிய தம்பி வீரபாண்டி ஆறுமுகம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அது தோட்டக்கலைக்கு என தனிப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்பதாகும். அதுபற்றி நான் சிந்திக்காமல் இல்லை. நான் சிந்தித்தப் பிறகு தான், இந்த தம்பி (வீரபாண்டி ஆறுமுகம்) சிந்தித்துள்ளார் என்பதை கூறுகிறேன். விரைவில் தோட்டக்கலைக்கென தனி பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

மழை பாதிப்பு விவசாயிகளுக்கு நிலவரி ரத்து:

 

 

கன மழையைத் தொடர்ந்து மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. எப்பகுதிகளில் பாதிப்பு என முழு விவரம் அறிந்து, விவசாயிகளுக்கான நிலவரி இந்த ஆண்டில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

 

விவசாயிகளுக்கான ஓய்வூதியம் 500 ரூபாயாக உயர்வு:

 

 

வேளாண் விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஏழை, எளிய, விவசாயிகள், தொழிலாளர்கள், சாமான்ய மக்கள் பயன்பெற  போகும் மற்றொரு அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன்.

 

 

60 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை 1998-ல் 100 ரூபாய் என அறிவித்தோம். பிறகு 150 ரூபாய் என உயர்த்தினோம். பின்னர் 2000-2001 ஆம் ஆண்டில் 200 ரூபாயாக உயர்த்தினோம். அதைத்தொடர்ந்து,  2006-ல் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போது விவசாயிகளுக்கான மாத ஓய்வூதியத் தொகை 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

 

 

தமிழக அரசு வேளாண் பட்டதாரிகள் சங்கம், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் வேளாண் அலுவலர்கள், வேளாண் பொறியாளர் துறையில் சமநிலையில் பணிபுரியும் பொறியாளருக்கு இணையான சம்பளமாக திருத்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த முக்கியமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எப்போது எனச் சொல்லவில்லை என்றார் முதல்வர்.

dinamani.com