முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் நாடகமாட வேண்டாம் - மாயாவதிக்கு எச்சரிக்கை!

09/10/2011 23:41

 

உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

ஆனால், தேர்தலுக்குத் தேர்தல் இப்படி கண்துடைப்புக் காரியங்களில் ஈடுபடாமல், முஸ்லிம்களுக்குரிய இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.

அ.இ.மு.ஐ.மோர்ச்சா தலைவர் எம்.ஏ.சித்திக் கூறுகையில் பல பிரச்னைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மாயாவதி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி கடிதம் எழுதுவதை விட்டு விட்டு, மாநிலத்தில் பிற்பட்டோருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 8.44 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப் படுத்த வேண்டும்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மாயாவதி அரசு அமல்படுத்தா விட்டால், அவர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம், அடுத்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களின் அனுதாபத்தைப் பெற, அவர் நடத்தும் நாடகமாகவே கருதப்படும். மதச்சார்பற்ற கட்சிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் எல்லாம், முஸ்லிம்களை, தங்களின் வாக்கு வங்கியாக கருதும் போக்கு நீண்ட நாளைக்கு நீடிக்காது. என்று  கூறியுள்ளார்.

"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி, பிரதமர் மன்மோகனுக்கு முதல்வர் மாயாவதி கடிதம் எழுதுவதெல்லாம், இந்த சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்றது. 2012ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்படும் நாடகம்,''சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஆஜம்கான் கருத்து அளித்துள்ளார்.


Create a website for free Webnode