முஸ்லீம்களுக்கு மத்திய அரசின் 4.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் தடை. மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு

30/05/2012 08:54

மே 29: முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மத்திய அரசின் ஆணையை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

 

மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விதத்தில் மத்திய அரசு ஆணை வெளியிட்டிருந்தது. இந்த ஆணையை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

 

ஆந்திர உயர் நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை எதிர்த்து சிறப்பு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இதனை விரைந்து செய்வோம். அடுத்த வாரம்தான் அட்டர்னி ஜெனரல் வருகிறார். அவர் வந்தவுடன் இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து விவாதிப்போம். இதனை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அத்தனை விரைவாகச் செய்வோம்.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக மதத்தைக் கொள்ள முடியாது. சிறுபான்மையினர் என்பது மத ரீதியில் மட்டுமல்ல மொழி அடிப்படையிலும் பார்க்கப்படக் கூடியதே. எனவேதான், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என நீதிமன்றம் சரியாகவே கூறியிருக்கிறது. ஆனால், நாங்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு கோரினோம். ஆனால், மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக் குழுக்கள் என்பதையோ; சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு அவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதையோ நிரூபிக்கும் ஆதாரம் எதையும் மத்திய அரசு சமர்ப்பிக்கவில்லை என்று ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றார் சல்மான் குர்ஷித். (தினமணி)

நியாபகம் வருகிறது

முன்னால் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியால் ஆந்திராவில் உள்ள முஸ்லீம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டு ஆணை செல்லாது என அன்றும் ஆந்திர உயர்நீதி மன்றம் தடை போட்டது. பின் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதால் அடுத்த ஓராண்டில் இட ஒதுக்கீட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அபு அஸ்ஃபா


Create a free website Webnode