மோகனகிருஷ்ணன் என்கெளன்டரால் இன்னொரு குற்றவாளி மனோகரன் பெரும் பீதி

10/11/2010 16:04

Manoharanகோவையில் இரண்டு சிறார்களை கொடூரமாக கொலை செய்த இருவரில் ஒருவரான மோகன கிருஷ்ணன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால், இன்னொரு குற்றவாளியான மனோகரன் பெரும் பீதியில் உள்ளான்.

கோவையில் முஷ்கின் என்ற சிறுமியையும், அவளது 8 வயது தம்பி ரித்திக் ஜெயினையும் கடத்திச் சென்று, முஷ்கினை இரக்கமே இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் கால்வாயில் தள்ளிக் கொலை செய்து கைதாகியவர்கள் மோகன கிருஷ்ணனும், மனோகரனும்.

இவர்களை விசாரணைக்காக தனித் தனியாக போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது போத்தனூர் அருகே போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு போலீஸ்அதிகாரிகளை துப்பாக்கி முனையில் கடத்த முயன்றதாக கூறி மோகன கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் அண்ணாமலையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த சம்பவம் நடந்தபோது வேறு ஒரு வேனில் இருந்தான் மனோகரன். அந்த வேன், மோகனகிருஷ்ணன்சென்ற வேனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தது. அப்போது கிணத்துக்கடவைத் தாண்டி வேன் போய்க் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில்தான் மோகனகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் மனோகரன் இருந்த வேனுக்கு வந்து சேர்ந்தது. இதைக் கேட்ட போலீஸார், வேனில் இருந்த மனோகரனிடம் இதைக் கூறியபோது அவன் வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டனாம். பயத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துள்ளது. நம்மையும் சுட்டுத் தள்ளி விடப் போகிறார்கள் என்ற முடிவுக்கு வந்து பயத்தில் நடுநடுங்கிப் போயுள்ளான்.

தன்னைச் சுற்றி துப்பாக்கிகளுடன் இருந்த போலீஸாரைப் பார்த்து அழுதபடி என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கதறியுள்ளான்.

மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டதால் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சிக்குப் போகவிருந்த திட்டத்தை மாற்றிய போலீஸார் மனோகரனை பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு முதலில் கொண்டு சென்று அங்கு வைத்து விசாரித்தனர்.

இதற்கிடையே, மனோகரன் குறித்து தகவல் தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் அவன் பொள்ளாச்சியில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போத்தனூர் போலீஸார் பொள்ளாச்சி சென்று மனோகரனை பாதுகாப்புடன் அழைத்து வந்து தங்களது காவல் நிலையத்தில் வைத்தனர்.

மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டது போல நாமும் சுடப்படுவோம் என்ற மரண பீதியில் தொடர்ந்து மனோகரன் உள்ளதாக கூறப்படுகிறது.oneindai.com