யுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் துவக்கம்

25/11/2010 10:23

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் துன்பத்தில் இருந்து விடுபெற 24 மணி நேர தொலைபேசி சேவை மற்றும் ஆலோசனை சேவையை நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவங்கி வைத்தார்.

இந்திய தொழிலாளிகள் மையத்தை பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளிகளின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1. 75 மில்லியன் இந்தியர்கள் பணி புரிகின்றனர்.

பிரதீபா பாட்டீல் அரபு நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது போன்ற மையங்களை வளைகுடா நாடுகளிலும் துவங்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

இவை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம் குறித்து ஆலோசனையும், உதவியும் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம். கே. லோகேஷ் இங்குள்ள இந்தியர்களின் குறைகளைக் களையத் தான் இந்த மையம் துவங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சி இந்தியா கிளப்பில் நடந்தது. இந்த 24 மணி நேரத் தொலைபேசி சேவை உலகிலேயே முதன்முறையாக இந்தியா தான் துவங்கியுள்ளது. இதை வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.

இது பிரச்சனைகளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

oneindia.in