1 கோடி கேட்டு 2 பேர் கடத்தல்: விரல்களை துண்டித்து அனுப்பிய கடத்தல்காரர்கள்

04/11/2010 14:24

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரி என்ற புராதன நகரைச் சேர்ந்தவர் அனில்குமார். தொழில் அதிபரான இவரது உறவினர்கள் ரஜத், கவுரவ், ஆகியோர் கடந்த மாதம் 15-ந்தேதி காலையில் பால் வாங்குவதற்காக சென்றனர்.
 
அப்பேது ஜீப்பில் வந்த கடத்தல் கும்பல் இருரையும் தாக்கி ஜீப்பில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனில் குமாருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர். 
ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய அனில்குமார் ரூ.25 லட்சம் வரை தர சம்மதித்தார். இதை கடத்தல் கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
இதுபற்றி அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பல் பற்றி விசாரணை நடத்தி 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
 
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல் காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில் பேசியவன் உங்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் சுடுகாடு அருகே கிடக்கிறது. போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.
 
உடனே அனில்குமார் பதறியடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு பார்சல் கிடந்தது. அதை பதட்டத்துடன் பிரித்துப் பார்த்த போது 4 விரல்கள் துண்டித்து வைத்து அனுப்பப்பட்டு இருந்தது.
 
கடத்தல் கும்பல் அனில் குமாரை மிரட்டவே கை விரல்களை துண்டித்து அனுப்பியுள்ளது. இது பற்றியும் அனில்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
 
போலீசார் கை விரல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவை கடத்தப்பட்டவர்களின் கை விரல்கள் தானா ? என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவை பரி சோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தரகுர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பல் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி இது போன்ற கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
தற்போது கடத்தப்பட்டவர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பதட்டத்தில் உள்ளனர்.
Nakkheeran.in