19 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்த மியான்மர் தலைவர் சூ-கீ விடுதலை ஆனார்

14/11/2010 14:45

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சிக்காக போராட்டம் நடத்தி வந்த பெண் தலைவர் சூ-கீ, கடந்த 19 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்தார். அவரது தண்டனைக்காலம் முடிவு அடைந்ததால் நேற்று அவர் விடுதலை ஆனார்.

உலக நாடுகள் கோரிக்கை

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதை எதிர்த்து ஜனநாயக ஆட்சி கோரி போராட்டம் நடத்தி வந்தவர் சூ-கீ. இவரை அந்த நாட்டு அரசு 19 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைத்து இருந்தது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் கோரியபோதிலும் அதை ராணுவ ஆட்சியாளர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் போலியான தேர்தலை அந்த நாட்டு அரசாங்கம் நடத்தியது. இதில் சூ-கீ போட்டியிட அனுமதிக்கப்பட வில்லை. அவரது தலைமையிலான கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. இந்த நிலையில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற்றது.

தண்டனை காலம் முடிந்தது

இதற்கிடையில் சூ-கீயின் தண்டனைக்காலம் நேற்றுடன் முடிவு அடைந்தது. அதனால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அந்த நாட்டில் கிளம்பியது. அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவில் அரசாங்கம் கையெழுத்திட்டது.

இந்த நிலையில் நேற்று முழுவதும் அவரை விடுதலை செய்வது பற்றி ராணுவ ஆட்சி வாய் திறக்காமல் இருந்தது. மாலையில் அவர் வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

விடுதலை

இந்த நிலையில் அவரது வீட்டு முன்பு போடப்பட்டு இருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினார்கள். உடனே அவரது வீட்டுமுன்பு கூடிஇருந்த ஆதரவாளர்கள் சூ-கீ வீட்டை நோக்கி ஓடிச்சென்றனர்.

தடுப்பு அகற்றப்பட்டதும் ராணுவ அதிகாரிகள் சூ-கீயின் வீட்டுக்குள் நுழைந்து அவரை விடுதலை செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை படித்தனர். பிறகு அவர்கள் அங்கு இருந்து வெளியேறினார்கள்.

சூ-கீ அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் இன்னும் வெளியிடவில்லை. அவரது அரசியல் திட்டம் என்ன என்பது தெரியவில்லை.

நோபல் பரிசு பெற்றவர்

65 வயதான சூ-கீ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். விடுதலை போராட்ட காலத் தலைவர்களில் ஒருவரான ஜெனரல் ஆங் சான் மகள். ஆங் சான் 1947-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் கழித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இவர் ஆங்கிலேயரான மைக்கேல் ஏரிஸ் சை திருமணம் செய்து கொண்டார்.

முதல் வீட்டுக்காவல்

உடல் நலம் இல்லாத தன் தாயாரை கவனித்துக்கொள்வதற்காக 1988-ம் ஆண்டு மியான்மர் திரும்பினார். ராணுவ ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை பொறுக்க முடியாமல், அவர் அரசியலில் ஈடுபட்டார். 1989-ம் ஆண்டு அவர் முதன்முதலாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.

பொதுவாழ்க்கைக்காக அவர் தன் வாழ்க்கையில் இழந்தது அதிகம். இவர் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அவரை அருகில் இருந்து கவனிக்க கூட முடியவில்லை.

கணவருக்கு விசா மறுப்பு

சூ-கீயை பார்ப்பதற்காக அவரது கணவர் விரும்பியபோது அவருக்கு விசா கொடுக்காமல் அரசாங்கம் சதி செய்தது.

கணவரை கவனித்துக்கொள்வதற்காக இங்கிலாந்து செல்ல அவர் விரும்பியபோது நாட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் திரும்ப முடியாது என்று அரசாங்கம் கூறி விட்டது. இதனால் நாட்டை விட்டு வெளியேற சூ-கீ மறுத்து விட்டார். கடைசியில் சூ-கீயை பார்க்கமுடியாமலேயே கணவர் இறந்து போனார்.

சூ-கீ தன் 2 மகன்களையும் பேரக்குழந்தைகளையும் பல ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை.

dailythanthi.com