6B பேருந்து டிரைவருக்கு அரண்மனையில் அடி உதை

15/04/2011 19:27

ராமநாதபுரத்தில் அரசு டவுன் பஸ் டிரைவரை பயணிகள் தாக்கியதால் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. ராமநாதபுரம் புதுவலசை டவுன் பஸ் டிரைவரான ராஜ்குமார். இவர் நேற்று வழக்கம்போல் புதுவலசை டிரிப் முடித்துவிட்டு அரண்மனை பகுதியில் பஸ்சை நிறுத்துவதற்காக வந்தார். புதுவலசை டிரிப் முடிந்தபின் ராமநாதபுரம் முதலூர் டிரிப்பாக அந்த பஸ் செல்வது வழக்கம். புதுவலசை டிரிப் முடிந்த நேரத்தில் முதலூர் செல்வதாக போர்டு மாற்றியதால் பயணிகள் ஏறினர். ஆனால் முதலூர் டிரிப் எடுக்க வேறு டிரைவர் பணிக்கு வரவேண்டும் என்பதால் பஸ்சை ராஜ்குமார் ஒரமாக நிறுத்தியுள்ளார். பஸ்சை ஒரமாக நிறுத்தியதால் முதலூர் செல்லாதோ என்ற சந்தேகத்தில் ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவரை தாக்கினர். பஸ் டிரைவர் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மற்ற டவுன் பஸ்களும் ரோட்டின் குறுக்கே நிறுத்தி "டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போராட்டத்தில் ஈடுபட்டனர். பஜார் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

 

தினமலர்